கற்கவேண்டுமென்னும் நினைவு கற்குங்கால் தானே அகல்வது இதற்கு ஒப்பாகும். தோய்ந்ததும் தோமில் இன்பத்தழுந்தும். அழுத்தல் எனினும் அழுந்தி அறிதலெனினும் ஒன்றே. அதுவே அனுபவம். (அ. சி.) ஈரைந்து - (1) ஆணவம் ஒழிதல், (2) தன்னை உணர்தல், (3) அதனை ஒழிதல், (4) நனவில் அதீதம், (5) வியாப்தம், (6) உபசாந்தம், (7) சிவமாதல், (8) சிவானந்தத்தில் தானற்று அழுந்தல், (9) அவ் வானந்தத்தை அனுபவித்தல், (10) அதனையும் ஒழித்தல். (5) 2471. பரையின் பரவ பரத்துடன் ஏகமாய்த் திரையினின் றாகிய தெண்புனல் போலுற்று உரையுணர்ந் தாரமு தொக்க வுணர்ந்துளோன் கரைகண் டானுரை யற்ற 1கணக்கிலே. (ப. இ.) திருவருள் நிறைவாகிய பரவலினால் ஆருயிர் பரமாகிய அவ் வருளுடன் பிரிப்பின்றி வேறற்ற ஒன்றாய் நிற்கும். இதற்கு ஒப்பு கடலினின்றும் எழுந்த துளி வான்புகுந்து மழையாய்ப் பொழிந்து ஆறாய் மலை நிலம் பலவும் கடந்து மீண்டும் அக் கடலினுக்கே வந்து பொருந்துவதாகும். ஈண்டுக் கடலென்பது கடல் நீரையன்று. கடலின் நீருக்கும் நிலத்துக்கும் அடிப்படையாய்த் தாங்கி நிற்கும் பூதவெளியை என்க. இதனால் கடவுளும் கட்டுயிரும் ஒன்றே என மட்டின்றிப் பேசும் வாய் வேதாந்த மாயாவாதக்கோள் பொருந்தாமை காண்க. அவர்கள் கடல் நீரைக் கடவுளாகவும் அதன் துளியைக் கட்டுயிராகவும் கரைகின்றனர். அப் பாழ்ங்கோள் பொருந்தாமை காண்க சிவகுருவின் அருளுரை உணர்ந்து ஆரமுதொத்த அருளின்பம் உணர்ந்துளோன் "மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனின்" கரைகண்ட கவினுளோன் ஆவன். ஆங்குப் பேச்சற்ற பெருநிலையுண்டாம். அதுவே உரையற்ற கணக்கில் என்று ஓதப்பெற்றது. கட்டுயிர் - பசு. (அ. சி.) பரையின் பரவ - திருவருளின் பெருக்கினால். திரையினின்றாகிய - கடலிற்கூடிய. தெண்புனல் - ஆறு. ஆர் அமுது ஒக்க - தேவ அமிர்தம்போல. உரையற்ற - பேச்சற்ற. (6)
1. சிறைசெய்ய. சிவஞானபோதம், 8. 4 - 1. " மெய்ஞ்ஞானந். " 7. 3 - 3. " சொற்பா. 8. திருக்கோவையார், 8.
|