களும் அறும். அறவே ஆருயிர் திருவடித் தூய்மையை உறும். உறவே பிறப்பினைத் தரும் குற்றமாகிய முப்பாழும் பற்றற அகலும். முப்பாழ் ஆருயிர்த்துரியம், அருட்டுரியம், அருளோன் துரியம் எனவும் கூறப்படும். பாழ் என்பது சொல்லொணா அருவநிலை. அவை அகலவே சிவத்தைப் பேணலாகிய தவத்தால் வரும் இயற்கை உண்மை அறிவின்பப் பற்று வாய்க்கும். அதுவே மேன்மைவாய்ந்த செயலறுதலாகிய துரியமாகும். இந் நிலைமையே உண்மை நிலையாகும். (அ. சி.) அவமான மும்மலம் - பிறப்பைக் கொடுக்கும் ஆணவம், கன்மம், மாயை, பவமான - குற்றமுள்ள. முப்பாழ் - மும்மாயையை. (மாயை - மாமாயை - பிரகிருதி மாயை.) பற்றற - பாசம் நீங்கும்பொருட்டு. துவம் - மேன்மை. (9) 12. சொரூப உதயம் (உண்மை எழுச்சி) 2791. பரம குரவன் 1பரமெங்கு மாகித் திரமுற எங்கணுஞ் சேர்ந்தொழி வற்று நிரவு சொரூபத்துள் நீடுஞ் சொரூபம் அரிய துரியத் தணைந்துநின் றானே. (ப. இ.) திருவைந்தெழுத்தினைச் செவியறிவுறுக்கும் சிவகுரு பரமகுரவனாவன். அவன் எண்ணிலவாய் எங்கும் பெருகியுள்ள பரமாகிய ஆருயிர்கள்மாட்டு நீக்கமற நிறைந்து நிற்கின்றனன். யாவும் உறுதிப் பாடெய்தச் சிவபெருமான் உறுதிப்பாட்டுடன் எங்கணும் நிறைந்து நிற்கின்றனன். எங்கணும் நிறைந்துள்ள சிவத்துடன் கூடியவுயிர் சார்பினால் எங்கணும் நிறைந்தனவாகும். அஃது ஆருயிரின் உண்மை நிலையாகும். உண்மை நிலையினைச் சொரூபநிலை என்ப. அவ்வுண்மை நி்லையினுள் நிலைபெற்ற உண்மை நிலையாக நின்றியக்குபவனும் சிவனே. இந் நிலையே அரியதுரிய நிலையாகும். அந் நிலைக்கண்ணும் அவன் அணைந்து நின்றருளினன். நம் பரம குரவரிவரென வருமாறு நினைவு கூர்க: 'நால்வர்நம் மூலர் நயந்தெமையாள் ஐங்குரவர், சால்பாம் 'சிவயசிவ' சார்ந்து. (1) 2792. குலைக்கின்ற நீரிற் குவலய நீரும் அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம் நிலத்திடை வானிடை நீண்டகன் றானை வரைத்து வலஞ்செயு மாறறி யேனே. (ப. இ.) ஒருநிலைப்படாது ஏனையவற்றின் நிலையினையும் குலைத்துத் தாமும் குலைவுறுவன ஐம்பெரும் பூதங்கள். அவை: மண், நீர், அலைக்கின்ற காற்று, அனல், வெளி என்பன. இவற்றுடனும், இவற்றின் சேர்க்கை
1. கருவனே. அப்பர், 5. 13 - 5. " சிரமஞ்."5. 22 - 9.
|