எல்லாவற்றுடனும் விரவி விட்டுப் பிரிவின்றி நிற்பினும் அருவ நிலைகூட எய்துதலில்லாத சிவன் உயிருடனும் உடல் உலகுகளுடனும் புணர்ந்து நிற்கும் மாயப்பெருமானாக விளங்குகின்றனன். அப் பெருமானைக் கண்டு அவனருளால் அவன் திருவடியிற் கூடும் பெருவாழ்வினை எய்துதல் கூடும். அவ் வாழ்வு எய்துவதற்கு அவனே சிவகுருவாக எழுந்தருளி வந்தால் மட்டும் முடிவதாகும். வேறு ஒன்றாலும் முடியாதாகும். (அ. சி.) கருவன்றி - தனக்கு ஒரு காரணம் இன்றி. மருவன்றி - ஒன்றோடும் கூடுதல் இன்றி. (6) 2797. உருவ நினைப்பவர்க் குள்ளுறுஞ் சோதி உருவ நினைப்பவர் ஊழியுங் காண்பர் உருவ நினைப்பவர் உம்பரு மாவர் உருவ நினைப்பவர் உலகத்தில் 1யாரே. (ப. இ.) சிவபெருமானின் திருவுருவினைக் குறித்து நாடுங் குணமுடையோர் சித்தத்துள் அறிவுப் பேரொளியாய் நின்று அவன் விளங்குவன். நினைத்தல் - தியானித்தல்; தேனித்தல். அம் முறையான் திருவுருவினை அன்புடன் நாடுவார் பலவூழிகளையும் அருளால் காண்பர். அத்திருவுருவினையெப்போதும் நினைப்பவர் சிவ வுலக வாழ்வினராவர். சிவ வுலகம் - திருக்கயிலை. மேலும் அக் குறியா நினைவுடையார் உலகத் தோடியைந்து நடப்பினும் அவர் உலகங் கடந்தவராவர். இவ் வுண்மையினை உலகிடை உண்மையாலறிவார் எவர்? (7) 2798. பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப் பரஞ்சோதி என்னுட் படிந்ததற் பின்னைப் பரஞ்சோதி யுண்ணான் படியப் படியப் பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் 2டேனே. (ப. இ.) திருவருளால் பரஞ்சோதியாகிய பேரொளிப் பெரும் பொருளைப் பற்றும் பேறு பெற்றேன். பற்றவே அச் செம்பொருளும் என்னுள் படிந்தருளிற்று. அங்ஙனம் படிந்தருளியபின்னை அப் பேரொளிப் பெரும்பொருளினகத்து அடியேனும் மெள்ள மெள்ளப் படிவிக்கப் பெற்றேன். அங்ஙனம் படியப்படியப் பேரொளிப் பெரும் பொருள் தன்னை யுணர்த்தி உரைத்தருளவும் கண்டேன். பறைதல் - பறைபோல் பலரும் அறிய விளம்பல் 'யுண்ணான்' :யள் + நான். (8) 2799. சொரூபம் உருவங் குணந்தொல் விழுங்கி அரியன வுற்பல மாமாறு போல மருவிய சத்தியாதி நான்கு மதித்த சொரூபக் குரவன் சுகோதயத் தானே.
1. சிரிப்பார், 8. கோயின் மூத்த திருப்பதிகம், 6. " வையத்துள். திருக்குறள், 50. 2. தன்னுணர. சிவஞானபோதம், 12. 3 - 1.
|