1171
 

அவ் விளக்கத்தின்கண் சிவபெருமான் அவ்வுயிரைத் தானாக்கி நின்றருள்வன். அந்நிலையினைச் சொல்லால் சொல்லுவதெவ்வண்ணம்.

(அ. சி.) சொல்லறும் - மோனம் உண்டாம். பாழாம் - வேறுபாடு இன்றாம். விள்ளா - உண்டாகா. தன்னுருவு - சீவபோதம்.

(9)


16. முத்திபேதம், கரும நிருவாணம்
(வழிப்பேறும், விழுப்பேறும்)

2821. ஓதிய முத்தி யடைவே உயிர்பர
பேதமி லச்சிவம் எய்துந் துரியமோடு
ஆதி சொரூபஞ் சொரூபத்த தாகவே
ஏதமி லாநிரு வாணம் பிறந்ததே.

(ப. இ.) சிறப்பித்துச் சொல்லப்படும் வீடாவது முறையாக ஆருயிரும், பேரருளும், பெரும்பொருளும் என்னும் செயலறலாகிய துரியத்தின்கண் எய்தும். ஆருயிர் - சீவன். பேரருள் - பரம். பெரும்பொருள் - சிவம். இவற்றை ஆருயிர், அருள், அருளோன் எனவுங் கூறுப. இம் மும்மை வேறுபாடுமின்றிச் செம்மை ஒருமையாய் நிற்குங்கால் ஆருயிரின் நீங்கா இயற்கை உண்மை தோன்றும். அஃது இயற்கை உண்மை அறிவின்ப வடிவினனாகிய சிவத்துடன் கூடுவதாகும். இந்நிலையே குற்றமில்லாத பேற்றுநிலையாகும். நிருவாணம் - பேறு. பேற்றிலெய்தும் குற்றம் வழிப்பேறாய் மீண்டும் பிறத்தல்; விழுப்பேறெய்தாமை.

(அ. சி.) அடைவே - முறையாக. நிருவாணம் - முத்தி.

(1)

2822. பற்றற் றவர்பற்றி நின்ற 1பரம்பொருள்
கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப்
பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரன்றே.

(ப. இ.) பற்றற்றான் பற்றினைப் பற்றுவதே பற்றறும் வாயில்: அதனால் பற்றற்றவர் பற்றி மீளாவடிமையாய் நிலைத்துநிற்கும் நிலைக்களப் பொருள் சிவபெருமானாகிய பரம்பொருள் என்றனர். அவனே ஓதியுணர்ந் தடங்கிய ஓங்குயர் விழுச்சீர் நல்லார் வல்லவாக் கருதும் கண்ணுதலாவன். கண்ணுதல்: நுதற்கண்; நெற்றிக்கண். மெய்யடியார் திருக்கூட்டம் மிளிர்ந்து சூழ்ந்து சிவ ஒளியுடன் நிற்குமாறருளும் பேரறிவுப் பேரொளிப் பிழம்பும் அவனே. அவன் திருவடியை அருளால் பெற்றவர்கள் மாறுபாட்டுரையாகிய பிதற்றுதலை ஒழிந்தனார்.

(அ. சி.) கற்று அற்றவர் - கற்று அறிந்து அடங்கினவர். சுற்று - சுற்றம். பெற்று உற்றவர் - அடைந்து அனுபவிப்பவர். பிதற்று - பேசுதல்.

(2)


1. பற்றற்றார் சேர். அப்பர், 4. 15 - 1.