(ப. இ.) ஆணவ வல்லிருள் சூழ்ந்துள்ள தன் முனைப்பாகிய கருங்கடற்கண் சிவனை மறத்தலாகிய தவாப் பெருங்குற்றப் பெருநஞ்சு தோன்றிற்று. அதனைக் கண்டஞ்சிய மாலுள்ளிட்ட தேவர்கள் சிவபெருமான்பால் முறையிட்டனர். சிவபெருமான் மன்னித்தருளலாகிய உண்டலைப் புரிந்தருளினன். உண்டதுமட்டுமன்றிக் கண்டத்தும் நிறுத்தருளினன். மாப்பெருங் குற்றம் மன்னிக்கப்பட்டமையால் அக் குற்றம் இடர்ப்பாடாகிய கண்டத்துட்பட்டது. அதுவே நஞ்சு கண்டத்து நிற்பதென்பதாகும். அத்தகைய நஞ்சுண்ட கண்டன். அவனே பதினான்கு உலகங்களுக்கும் பதியாவன். அவனே பிறவாயாக்கைப் பெரியோன். அவன் வீற்றிருந்து அருளும் திருமலை திருக்கயிலைத் திருமலை. அங்கு என்றும் நின்று நிலவுந் திருவருள்போல் நீரறவறியா ஆழமான சுனையும், மந்தியுமறியா மரன்பயில் காடும் உள்ளன. அதன்கண் உள்ளவன் சிவபெருமான். அவன் என்றும் நிலைபெற்றுள்ள செந்தமிழ்த் திருமறைத் திருவைந்தெழுத்தால் நன்று பெறப்படும் வேந்தனுமாவன். அதனாலேயே 'நந்தி நாமம் நமசிவய' (959) என்ற அருள் நூல்கள் நவில்வவாயின. (அ. சி.) ஏழுமிரண்டிலும் - பதினான்கு உலகங்களிலும். யாழும் . . . . . அங்குளன்-யாழ்ப்பாணர்களும் சுனைகளும் காடுகளும் நிறைந்த கயிலையில். எழுத்தைந்து - நமசிவாய. (18) 2958. உலகம தொத்துமண் ணொத்துயர் காற்றை அலர்கதிர் அங்கியொத் தாதிப் பிரானும் நிலவிய மாமுகில் நீரொத்து மீண்டச் செலவொத் தமர்திகைத் தேவர்பி ரானே. (ப. இ.) யாண்டும் செறிந்து வேண்டுவார்க்கு வேண்டுவ வேண்டி யாங்கீயும் பெரு வள்ளல் சிவபெருமான். அவன் ஒன்றாம் கலப்புத் தன்மையால் உலகத்துயிராய், மண்ணாய், உயர் காற்றாய், விளங்கா நின்ற கதிர்களையுடைய ஞாயிறு திங்கள் (தீ) என்னும் ஒளிப் பொருள்களாய், யாவற்றுக்கும் இடங்கொடுத்து நிற்கும் மாகம் ஆகிய விசும்பாய், மழை நீராய்த் திகழும் எண்பேருருவத்தனாய் விளங்குகின்றனன். இப் பொருள்களுடன் உடனாந் தன்மையில் இயைந்தியக்கி அவற்றைத் தொழிற்படுத்தியருள்கின்றனன். பொருள் தன்மையால் அவனே அனைத்திற்கும் முழுமுதல்வனாவன். எண்புலக் காவலர்க்கும் அவனே முதல்வன். அதனால் அவனே தேவர்பிரானாவன். (மா+கம்) மா என்பது மாகம் என்பதன் கடைக்குறை. அன்றி மாமுகில் என முகிலுக்கு அடையாக்கி, விசும்பை இனம்பற்றிக் கூறலும் ஒன்று. (அ. சி.) திகைத்தேவர் - திக்குப்பாலகர். (19) 2959. பரிசறிந் தங்குளன் அங்கி அருக்கன் பரிசறிந் தங்குளன் மாருதத் தீசன் பரிசறிந் தங்குளன் மாமதி ஞானப் பரிசறிந் தன்னிலம் பாரிக்கு மாறே. (ப. இ.) தீயின் தன்மையினையும் ஞாயிற்றின் தன்மையினையும் அறிந்தாக்கி யருள்பவன் சிவன். அதுபோல் காற்றினும் உள்ளான்.
|