285. பற்றது பற்றிற் பரமனைப் பற்றுமின்1 முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில் கிற்ற விரகிற் கிளரொளி வானவர் கற்றவர் பேரின்பம் உற்றுநின் றாரே. (ப. இ.) தூயவுள்ளத்தால் ஒன்றனைப் பற்றவேண்டுமாயின் பெரும் பொருளாய்ச் செம்பொருளாய் அரும்பொருளாய் அன்பர் உள்ளத்து வரும் பொருளாய் வயங்கும் சிவபெருமான் திருவடியிணையினையே பற்றுங்கள். அம் முதல்வனின் திருவருள் கைவரப் பெற்றால் எல்லாம் எளிதின் இனிதாய் முற்றுறும் விழுப் பொருளாம் சிவபெருமான் திருவடிக்குத் தொழும்பராய் ஒழுகியுய்யுங்கள். அதற்குரிய வழிவகைகளாம் விரகினை உணர்ந்தவர் என்றும் பொன்றாச் சிவவுலகத்தவர். அவர் அவனருளால் அவன் திருவடிப் பெரும் பேற்றின்பத்தினை முற்றும் உற்று நுகர்ந்து நின்றனர். முற்றது : முற்றியதென்பதன் சிதைவு. (அ. சி.) கிற்றவிரகு - தொழும்பனாம் உபாயம். (9) 286. கடலுடை யான்மலை யானைந்து பூதத் துடலுடை யான்2பல ஊழிதொ றூழி3 அடல்விடை4 யேறும் அமரர்கள் நாதன் இடமுடை5 யார்நெஞ்சத் தில்லிருந் தானே. (ப. இ.) சிவபெருமான் உடைமைப் பொருளாகக் கடலையும் மலையையும் உடையன். நன்மையின் பேரெல்லையாகக் கடலையும், அடக்கத்தின் ஒக்கமாக மலையையும் நாயனார் நவின்றருளியதும் நாடுக. உலகமே உருவமாக உடைய அவன் 'நிலம் நீர் நெருப்பு உயிர் (காற்று) நீள் விசும்பு' ஆகிய ஐம்பெரும் பூதத்தையும் அப் பூதச் சேர்க்கையாகிய உலகத்தையும் உடலாகவுடையன். ஊழி ஊழியாகத் தான் அழியாது நின்று புண்ணிய வண்ணமாம் அடல் விடையினை ஏறியருளும் நாரி பாகன் சிவன். அடல் விடை என்பது பாவத்தை அடும் புண்ணிய ஆனேறாகும். அறப்பண்புமாகும். புண்ணியம் வளர எண்ணரிய பாவம் தேயும் என்பது உண்மை. அதற்கு ஒப்பு ஒளிவளர இருள் அடங்குவதாகும். அச்சிவனே அவன் திருவடியினை இடையறாது விரும்பும் அமரர்களாகிய சிவவுலகத்தார்க்கு முதல்வன். அமரர் - விருப்புடையோர். திருவடியுணர்வாம் இடமுடையார் புனித உள்ளத்தைச்சிவன் தனிப்பேரிடமாகக் கொள்வன். அது கருஇல்லாம் திருக்கோவில் முதலிடத்தினும் மிக்கது. (அ. சி.) இடம் உடையார் - பேர் அறிஞர். (10)
1. பற்றுக. திருக்குறள், 350. " பற்றற்றார் சேர். அப்பர், 4. 15 - 1. 2. தானலா. அப்பர், 4. 40 - 1. " உலகமே. சிவஞானசித்தியார், 5 - 2 - 6. 3. ஊழிதோ. ஆரூரர், 7. 100 - 10. 4. பொன்றாது. சம்பந்தர். 2. 80 - 6. 5. உடம்பெனு. அப்பர், 4. 75 - 4.
|