சித்தத்தில். ஒளி - விளங்கும். பெறுதி இல் மேலோர் - விருப்பு வெறுப்பு இல்லாத தவசிகளுக்கு. (5) 2987. பற்றினுள் ளேபர மாய பரஞ்சுடர் முற்றினு முற்றி முளைக்கின்ற மூன்றொளி நெற்றியி னுள்ளே நினைவாய் நிலைதரு மற்றவ னாய்நின்ற மாதவன தானன்றே.1 (ப. இ.) 'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்பதனால் பற்றப்படும் பொருள்கள் பலவற்றுள்ளும் மாறாததும், சிறந்ததும், வேறாகாததும், கூறாகாததும் ஆகிய மெய்ப்பொருள் சிவபெருமான் ஒருவனே. அவனையே பற்றுதல்வேண்டும். அவன் யாண்டும் நீக்கமற நிறைந்து விளங்கியருள்கின்ற அன்பறிவு ஆற்றலாகிய மூன்றொளி. அவன் ஆருயிர்களின் புருவநடுவின்கண் அவ் வுயிர்களுக்கு நினைப்பிக்கும் நினைவாய் நிலைத்தருள்வன். அவன் 'உள்குவார் உள்ளத்துள்ளே அவ் வுருவாய் நிற்கின்ற அருளுடையவன்' ஆதலின் அத்தகைய வடிவுசேர் பெருந்தவத்தோனும் அவனே. மாதவன் - மாதோடு கூடிய தவன் என்றலும் ஒன்று. (அ. சி.) பற்றினுள் - பற்றப்படும் பொருள்களுள். பரமாய - மேலாய. முற்றினுமுற்றி - எங்கும் நிறைந்து. மூன்றொளி - இரவி, மதி, தீ. நெற்றியினுள்ளே - ஆஞ்ஞையில். நினைவாய் - கருதியவண்ணமாய். மற்று அவனாய் - அக்கருதியவன் வடிவமாய். (6) 2988. தேவனு மாகுந் திசைதிசை பத்துளும் ஏவனு மாம்விரி நீருல கேழையும் ஆவனு மாமமர்ந் தெங்கு முலகினும் நாவனு மாகி நவிற்றுகின் 2றானன்றே. (ப. இ.) சிவபெருமான் பதின் புலமாகிய பத்துத் திசையுள்ளும் தானே விழுமிய முழுமுதற் கடவுளாய் விளங்குவன். அவன் எல்லாரினும் மேம்பட்ட 'வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனும்' ஆவன். விரி நீர் வியனுலகம் ஏழினும் நிறைந்து நிற்குமவனும் ஆவன். அவன் எங்கணும் விரும்பி இயைந்தியக்கும் இயவுளுமாவன். அவன் எல்லாவுலகிடை வாழும் உயிர்கள் அனைத்திற்கும் நாவில் நின்று நவிற்றுவிக்கும் நன்மொழியுமாவன். எனவே எல்லா நிகழ்வுகளும் சிவபெருமானின் திருவருள் நிகழ்வின் ஏரினாலேயே ஆகும். அச் சிவபெருமான் நாயன்மார் நாவின்நின்று அவர்களும் உலகமும் உய்தற்பொருட்டுத் தன்னைப் பாடுவித்தருள்கின்றனன். இது சிவபெருமான் உடனாய் நின்று செய்து போதரும் காட்டும் உதவியாகும். நம்பியாரூரருக்குப் பித்தனென்று பாடுகவென்று பணித்தருளியதும், 'தில்லை வாழந்தணர்த மடியார்க்கு மடியேன்' என்று பாடப் பணித்தருளியதும்,
1. துஞ்சும். அப்பர், 5. 93 - 8. 2. மலையினார். சம்பந்தர், 1. 76 - 1. " பத்திமையாற். அப்பர், 6. 54 - 3. " நாயேனைத். 8. திருக்கோத்தும்பி, 12.. " விண்ணின்று. திருக்குறள், 13.
|