197
 

தோன்றும் பல்வேறு தோற்றத்தன். பூதப்படைகளையுடையவன். ஆருயிர்கள் உய்யும் பரிசாக உலகு உடல்களைப் படைத்தருளும் பெருங் கொடையுடையான். எட்டு வான் அருட் குணத்தையுடையவன். இவ்வெட்டு வான்குணமும் பின்னல் சடையாகவுடையவன். பின்னல் - புணர்ப்பு; அத்துவிதம். ஆருயிர்களின் எண்ணமாகிய சிந்தையினைப் பேரருளால் சார்ந்து நின்றனன். பூதம் - உயிர்கள். சடை - தாங்கல்.

(4)

430. உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே.

(ப. இ.) 'யாவார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்' சிவபெருமானாதலின், அவன் உயர்ந்தவன் ஆகின்றான். உகப்பு - உயர்வு. சிவபெருமான் உயர்ந்துநின்றே ஏழுலகங்களையும் படைத்தருளினன். அதுபோல் பல ஊழிகளையும் படைத்தனன். அதுபோல் ஐம்பெரும் பூதங்களையும் படைத்தருளினன். அதுபோல் ஆருயிர்கட்கு வேண்டும் உடல்களைப் படைத்தருளினன். ஏழுலகு: எழுவகைப் பிறப்புயிர்களும் உய்யப் படைத்தளிக்கும் உடல்கள் என்றலும் ஒன்று. எழுவகைத் தீவுகள் என்றலும் ஒன்று. ஊழி - காலவரையறை. உயிர்ஊன் - ஆருயிர் உறைதற்காம் உடல். ஊன்; ஆகுபெயர். உகப்பு: உயர்வு. 'உகப்பே யுயர்தல் உவப்பே யுவகை.' - தொல். சொல்-305.

(5)

431. படைத்துடை யான்பண் டுலகங்கள் ஏழும்1
படைத்துடை யான்பல தேவரை முன்னே
படைத்துடை யான்பல சீவரை முன்னே
படைத்துடை யான்பர மாகிநின் றானே.

(ப. இ.) தொன்மைக் காலத்தே முழுமுதற் சிவபெருமான் ஆருயிர்கள் உய்வதன்பொருட்டு உடல் கலன் உலகம் உணா முதலியவற்றை உள்ளதாகிய மாயையினின்றும் படைத்து உயிர்களுடன் பொருத்தியருளினன். இதுவே படைப்பு. உயிர்கள் என்றும் உள்ளன. படைக்கப்பட்டன அல்ல. அதுபோல் முன்னமே மல ஆற்றல் குறைந்த அளவில் பற்றியுள்ள உயிர்களைத் தேவராகப் படைத்தருளினன். இத்தேவர்கள் பிறப்புத் தேவர் ஆவர். இவர்கள் நிலையினை மக்களாய்ப் பிறந்தாரும் எய்துவர். அவர்கள் சிறப்புத் தேவர் என்று அழைக்கப் பெறுவர். பிறப்புத் தேவர் மலவாற்றல் மிகுந்த அளவில் பற்றியுள்ள ஆருயிர்கட்குத் துணைசெய்யவே ஆண்டவனால் படைக்கப்பட்டனர். அதுபோல் பல சீவர்களாகிய உயிர்களுக்கும் உடல் முதலியவற்றைப் படைத்தருளினன். எல்லாவற்றையும் படைத்து உடையான் என்னும் திருப்பெயர் தாங்கியுள்ளவன் சிவன். எல்லாவற்றுடனும் கலந்து நிற்பவனும் அவனே. எல்லாவற்றையும் கடந்து நிற்பவனும் அவனே. அவன் கலப்பு நிலையில் இறைவன் என்று அழைக்கப்படுவன். கடந்த நிலையில் பரமன் என்று அழைக்கப்படுவன். பரம் - மேல்; விழுப்பொருள்.

(6)


1. ஏழுடையான். 8. திருக்கோவையார். 7.