(ப. இ.) ஓசை முடிந்த இடமே திருவருள் வெளிப்படும் இடம். அதுவே அகத்தவம். அத் தவப்பேறே திருவடியுணர்வு. ஆண்டுத் திருநீலகண்டச் சிவபெருமான் வெளிப்படுவன். (12) 590. உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந் துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக் கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.1 (ப. இ.) அகத்தே மூலமுதற்றோன்றும் ஆறுநிலைகளிலும் அது போல் அகத்தே காணப்படும் திங்கள் முதலிய ஐந்து விளக்கங்களிலும், புகழப்படுகின்ற பேரொளி உண்டாகும். அவற்றால் ஆணவ வல்லிருள் அகலும். புலன் எனப்படும் பூத முதலாகிய தன்மாத்திரை ஐந்தனுள் சிறந்தது ஓசை. அஃது ஒடுங்குதல் வேண்டும். ஒடுங்கவே திருவடிப்பேறாகிய கதியினையருளும் கொன்றைமாலையணிந்த சிவபெருமான் திருவடியினைச் சேர்தல் உண்டாகும். புறவோசை யொடுங்கினவிடத்தே அகவோசை தோன்றும். ஆறினும்: 1. மூலம், 2. கொப்பூழ், 3. மேல்வயிறு, 4. நெஞ்சம், 5. மிடறு, 6. புருவநடு என்னும் ஆறு நிலைகளினும். உள்ளங்கி - அகஒளி. ஐந்து - திங்கள், ஞாயிறு, தீ, விளக்கு, பரவெளி என்னும் ஐந்து நிலைக்களங்களிலும் விளங்கும் ஒளி. அதிக்கின்ற ஐவருள் நாதம்: ஐவருள் அதிக்கின்றநாதம் - பூத முதலாகிய தன்மாத்திரையுள் மிக்கதாகிய ஓசை. கதி - திருவடிப்பேறு (அருளும்). (13) 591. பள்ளி அறையிற் பகலே இருளில்லை கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம் ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது வெள்ளி அறையில் விடிவில்லை தானே. (ப. இ.) பள்ளியறையாகிய ஆயிரவிதழ்த் தாமரைக்கண் எப்பொழுதும் பேரொளிப் பெருவிளக்கு ஒளிர்ந்துகொண்டிருக்கின்றது. அதனால் இருளில்லை. அத்திருவருள் விளக்கினைக் கண்டவர் யோகியரும் ஞானியரும் ஆவர். ஞானத்தில் ஞானங் கைவந்தவரே நாயன்மார். இத்தகையோர் உடல்கள் ஏனையார் உடல்கள்போன்று சுடுகாட்டில் எரிக்கப்படுதலோ, இடுகாட்டில் புதைக்கப்படுதலோ, கல்லறையில் அடக்கப்படுதலோ இலவென்க. அக் குறிப்புத் திருத்தொண்டத் தொகையில் ஓதப்பெறும். நாயன்மார் யார்க்கும் யாண்டும் கற்குகை (சமாதி) இன்மையே தெள்ளிதின் விளக்கும். ஒண்மையுடைத்தாகிய இதனையறியின் வேண்டுமேல் அளவின்றி அகவையும் நீளலாம். பேரொளி வண்ணமாம் பெருமானடியில் பேரின்பமுடிவு என்றும் இன்று. பகலே எப்பொழுதும் திருவருள் விளக்கம். இருளில்லை - அகவிருள் புறவிருள் இரண்டும் இல்லை. கொள்ளி அறை - சுடுகாடு. கொளுந்தாமல் - உடம்பு எரிபடாமல்; பூதங்கள் ஐந்தும் தத்தம் இனமாகிய உலகப் பூதங்களுடன் கலந்துவிடும். வெள்ளி - பேரொளிவண்ணம். (அ. சி.) பள்ளி அறை - உள்ளம். கொள்ளி அறை - சுடுகாடு. (14)
1. ஓசையெலா. திருக்களிற்றுப்படியார், 33.
|