280
 

(அ. சி.) காரியமான உபாதி ஏழு - சீவனுடைய உபாதி 7. ஆரிய காரண (உபாதி) ஏழு - ஈசனுடைய உபாதி 7. தார் - ஒழுங்கு. தார் - இயல் - தற்பரம் எனப் பிரிக்க.

(8)


11. அட்டமாசித்தி
(எண் பெரும்பேறு)
பரகாயப்பிரவேசம்
1

620. பணிந்தெண் திசையும் பரமனை நாடித்
துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானை
அணிந்தெண் திசையினும் அட்டமா சித்தி
தணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.

(ப. இ.) சிவபெருமான் திருவடியிணையினைப் பணிந்து எண்பெரும் பேறும் பெற்றவர்கள் அட்டமாசித்தியராவர். அவர்கள் சிவபெருமான் ஒருவனையே முழுமுதலாகக்கொள்ளும் பழுதில் விழுமியோராவர். அவர்கள் எண்புலன்களிலும் சென்று எண்பெரும் பேற்றினை நிலை நாட்டியவராவர். சிவபெருமானை யாண்டும் பணிந்து தொழுதல் கூறுவார் எண்திசையும் என்றார். அணிந்தெண்...தாபித்தவாறே - தொழுத பேற்றால் எண்வகைச்சித்தியும் கைவரப்பெற்று எட்டுப்புலன்களிலும் நிலைநிறுத்தியவாறாம்.

(1)

621. பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பறுத் தானே.2

(ப. இ.) வானவர் உள்ளிட்ட அனைத்துயிர்களின் தன்மைகளையும் இருந்தாங்கு அறிபவன் சிவபெருமான். அவன் திருவடியைத் திருமுறை வழியாகத் தொழுதேன். திருச்சிற்றம்பலமென்னும் செந்நெறி மன்றம் கண்டேன். காமம் வெகுளி மயக்கமென்னும் முக்குற்றமும் அகன்றன. அட்டமாசித்தியும் கைவந்தன. மேலும் பேசவொண்ணாப் பேரருளும் பெற்றேன். பிறப்பும் இறப்பும் அறுத்தருளி ஆட்கொண்டனன். பரிசறிவானவர் பண்பன் - எல்லார் தன்மைகளையும் இருந்தாங்கு இருந்து அறிந்தருளும் மேலோர் முதல்வன். துரிசற - காமம் வெகுளி மயக்கமாகிய முக்குற்றம் நீங்க. தூவெளி - தூயபரவெளி; திருச்சிற்றம்பலம். பிறப்பறுத்தான் - இறவாத இன்ப அன்பு தந்தருளிப் பிறப்பினை நீக்கினான்.

(அ. சி.) அடி என - திருவடிகளே பொருள் என.

(2)


1. வேற்றுடல் நுழைவு.

2. செயற்கரிய. திருக்குறள், 26.