350
 

834. பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொ டாறும் உயர்கலை பான்மதி
ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்துகொள் வீரே.

(ப. இ.) பகலோனாகிய ஞாயிற்றின் உயர்வாகிய கலைகள் பன்னிரண்டாகும். அதுபோல் பால்போல் விளங்கும் திங்களின் கலைகள் பதினாறாகும். தீயின் கலை அறுபத்துநான்காகும். இவை மூன்றும் இம்முறையாக விளங்குவதை ஆராய்ந்துகொள்வீர்களாக. அங்கி - தீ.

(4)

835. எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
கட்டப் படுமீ ரெட்டா மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாவே.

(ப. இ.) மேற்கூறிய முறைப்படி அறுபத்துநான்குடன் ஒட்டியிருக்கின்ற தீயும், பன்னிரண்டுடன் கூடிய ஞாயிறும், பதினாறுடன் ஒட்டிய திங்களும் தனித்தனி விளங்கிக்கொண்டிருக்கின்றன. இவை ஒன்றோடொன்று ஒட்டுதல் கூடா.

(5)

836. எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டுந் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்
கட்டப் படுந்தார கைக்கதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே.

(ப. இ.) மேற்கூறிய முவ்வகையான கலைக்கதிர்களுள், பிறையுவாவாகிய அமாவாசையில் திங்களின் கதிர் ஒடுங்கியிருப்பதால் சுட்ட சோமன் எனக் கூறப்படும். சோமன் - திங்கள். அந்நாளில் திங்களினிடத்தில் விண்மீன்போல் காணப்படும் கதிர்கள் நான்குள. இவை அடங்கியிருப்பன. இவை தொண்ணூற்றாறு மெய்களுடன் கலந்து நிற்கும். மெய்கள் - தத்துவங்கள். கலைகள் ஞாயிறு. 12, திங்கள் 16, தீ 64, நாள் 4. ஆகக் கலைகள் தொண்ணூற்றாறு.

(6)

837. எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்
செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே.

(ப. இ.) ஞாயிறு திங்கள் தீ இவற்றின் கலைகளெல்லாம் இடநாடி வலநாடி, சிறப்பாகச் சொல்லப்படும் நடுநாடி இவற்றின் வழியாகக் கீழ் நோக்கி மூலத்திற்செல்லாது, மேலெழுப்பி உச்சிக்குச் செல்லுமாறு செலுத்தச் சேர்தலால் அங்ஙனம் சேரும் பேறுபெற்றவர் நல்லோராவர். அத்தகையோர் சிவபெருமான் திருவடியை நண்ணி நிற்பர். இடநாடி - இடகலை. வலநாடி - பிங்கலை. நடுநாடி - சுழுமுனை.

(7)