419
 

அவனைவிட்டுப் பிரியாது அங்கெல்லாம் (1030) உளள். இயங்கு திணை நிலைத்திணையாகிய இருசார் உடம்புகள் எங்கெலாம் உள அங்கெலாம் பொருந்திய உயிர்க்குயிராய்க் காவலனாயுளன் சிவன். வெளி எங்கெலாம் உள்ளது அங்கெலாம் ஆருயிர்க்கு இன்பந்தரும் தென்றற் காற்றாயுளன். இவையே எல்லா இடங்களிலும் நீக்கமறச் சிவபெருமான் நிறைந்து நிற்கும் பல்வேறு குறியாம் என்பர். மந்தமாருதம் - தென்றற்காற்று. 'வானெங்குளவங் குளேவந்து மப்பாலாம்' என்னும் பாடத்திற்கு வானுள்ள இடமெல்லாம் சிவன் வந்து நிறைந்தும் அதற்கு அப்பாலும் உளன் என்று பொருள் கூறுக.

(அ. சி.) சத்தியும் சிவமும் உலகில் பிரிவின்றி நின்ற நிலையைக் கூறிற்று இம்மந்திரம்.

(11)

1032 .பராசத்தி மாசத்தி பல்வகை யாலுந்
தராசத்தி யாய்நின்ற தன்மை யுணரா
உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
புராசத்தி புண்ணிய மாகிய போகமே.

(ப. இ.) மேலாகிய ஆற்றலும், பெரிதாகிய ஆற்றலும் உடையவள் அம்மை. பலவகையாலும் உலகு உடல் உயிர்களைத் தாங்கும் ஆதார ஆற்றலுடையவளும் அவளே. மெய்யுணர்வு வடிவமாக இருப்பவளும் அவளே. இவைகளே அவள்தம் திருவுருவங்கள். யாவர்க்கும் விருப்பத்தை அருள்பவளும் அவளே. எல்லாவூழிகளிலும் ஆருயிர்களைப் புரக்கும் ஆற்றல் உடையவளும் அவளே. புண்ணியப்பயனைத் தந்தருளும் வாழ்வும் அவளே. வாழ்வு - போகம். பராசத்தி மாசத்தி என்பன அடையடுத்துநின்ற பண்புப் பெயர்கள். தராசத்தி - தாங்கும் ஆற்றல். யுணரா உராசத்தி: யுணராவுரு, ஆசத்தி என்று பிரித்தல்வேண்டும். புரா - புரக்கும்.

(அ. சி.) பராசத்தி - எங்கும் வியாபித்துள்ள சத்தி. தராசத்தி - ஆதாரசத்தி. உராசத்தி - பொருந்தும் சத்தி. புராசத்தி - திரிபுரை சுந்தரி.

(12)

1033 .போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகஞ்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகஞ்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்
பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.

(ப. இ.) ஆருயிர்க்கு வினைக்கீடாக விரும்பிய வாழ்வினையருளும் நகரப் பொருளாகிய நடப்பாற்றல் அவ் வுயிர்களுடன் இணைந்து கன்ம ஒப்பு வரச் செய்து அவ்விடத்தே வகரப் பொருளாகிய வனப்பாற்றலாக நிற்பன். போகஞ் செய்சத்தி 'ந' பராசத்தி 'வ'. ஆருயிர்களின் நெஞ்சிடத்து நின்று அடியவர்களுக்கு நாளும் திருவடியுணர்வு பெருகச் செய்யும் கொழுகொம்பொத்த செல்வியாவள்.

(அ. சி.) ஆகம்செய்து - மனத்தில் இருத்தி. பாகம்செய் - முதிர்ச்சி பெறும்.

(13)