(ப. இ.) திங்கள் போன்ற நெற்றியையுடைய பேரொளிசேர் திருவருளம்மை, நிலைபெற்றிருக்கும் வளமனை ஆயிர்களின் நெற்றியாகும். அவள் நிறம் நெந்நிறம் ஆகும். கலை பதினாறாகும். யாவரும் பாராட்டிப் புகழ எழுந்தருளியிருப்பவள் திருவருளம்மையே. (அ. சி.) சந்திரன் - மதி போன்ற நெற்றியையுடைய மனோன்மனி. சென்னி இருப்பிடம் - மனோன்மனிக்கு இருப்பிடம் சென்னியில். பதினாறு - பதினாறு கலைகள். (14) 1141 .பராசத்தி யென்றென்று பல்வகை யாலுந் தராசத்தி யான தலைப்பிர மாணி இராசத்தி யாமள வாகமத் தாளாகுங் குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே. (ப. இ.) திருவருளம்மை எக்காலத்தும் பலவகையாலும் அனைத்தையும் தாங்கும் ஆற்றலளாவள். அவளே முதன்மையான அருள் நூல் அளவையளாவள். அவளே பேரரசியாவள். அவளே யாமளவாக மத்தளாவள். இத்தகைய திருக்கோலங்களெல்லாம் செவ்வி முதிர்ந்த வழித்தம் முதல் குருவுமாய் எழுந்தருளும் திருவருளம்மையின் திருக்கோலங்களாகும். இவ்வுண்மை திருவருள் துணையால் உணர்ந்தனன். (அ. சி.) தராசத்தி - தாங்கும் சத்தி. தலைப்பிரமாணி - முக்கியமான தமிழ்நான்மறையையுடையவள். இராசத்தி..... ஆகும் - ஒன்பது ஆகமங்களில் ஒன்றாகிய வியாமள ஆகமத்தில் சிறப்பித்துக் கூறப்படாநின்ற சத்தி. குராசத்தி - குருவாக நின்ற சத்தி (குரு + ஆசத்தி). (15) 1146 .உணர்ந்துல கேழையும் யோகினி சத்தி உணர்ந்துயி ராய்நிற்கும் உன்னதன் ஈசன் புணர்ந்தொரு காலத்துப் போகம தாதி இணைந்து பரமென் றிசைந்திது தானே. (ப. இ.) சிவனும் அருளுடன் ஒருகாலத்து இணைந்து ஆருயிர் வாழ்வுறப் போகநிலையாகிய வாழ்வு நிலையில் பரமென்றிருந்தனன். அப்பரத்துடன் இசைந்த பராசத்தி தன் ஈசன் ஆகிய சிவம் திருவுள்ளம்கொள்ள யோகினிசத்தியாகிய நடப்பாற்றலால் ஏழுலகங்களையும் உணர்ச்சியால் தோற்றுவித்தது. தோற்றுவித்த ஏழுலகங்களாகிய ஏழுவகைப் பிறப்புயிர்கட்கும் உயிர்க்குயிராய் நின்றதும் அவ்வாற்றலுக்குரிய அம்மையாகும். (அ. சி.) முன்னதன் - ஆக்கல் தொடங்குமுன். (16) 1147 .இதுவப் பெருந்தகை எம்பெரு மானும் பொதுவக் கல்வியும் போகமு மாகி மதுவக் குழலி மனோன்மனி மங்கை அதுவக் கல்வியுள் ஆயுழி யோகமே. (ப. இ.) இஃது என்று சுட்டப்பெறும் அம்மையும், பெருந்தகையாகிய சிவனும் கல்வியும் அதன் பயனும் போன்று பொருந்தியிருந்தனர்.
|