50
 

யில் நிற்கும் மாந்தர்கள்தாம் தவம் செய்யும் மாந்தராவர். அத்தகையோர் சிவஞானிகளையே சிவமென வழிபடுபவர். ஏனையோர் யான் எனது என்னும் செருக்கால் தம் உடம்பினையே தெய்வமென மடம்பட்டு ஏனைய உயிர்போல் மூச்சுவிடுதல் ஒன்றே பற்றி உயிர்க்கின்றவராவர். அவ் வுயிர்கட்கு நமன் வருங்கால் 'இவன் மற்றென்னடியா னென்று' கூறும் சிவன் வெளிப்படாமையால் அந் நமனே தெய்வமாவன். (ஆக்கைக்கே இரைதேடி அலமந்து அறஞ்செய்யாது கழியும் அறிவிலார்க்கு மாற்றரிய கூற்றுவன் தெய்வம் எனத் தோற்றுவன்.)

(அ. சி) ஊன் தெய்வமாக - தேகத்தையே பெரிதாக எண்ணிக் காலங் கழிப்பவர். (8)

115. திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி1
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்குந் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே.

(ப. இ.) ஒருவன் அறஞ்செய்யின், தனக்கும் தன் வழியினுள்ளார்க்கும் அழியாத பழியில் புகழ் நிறுவியவனாவன். அவ்வறம் மேற் சிவனடி கூடுதற்கு வாயிலாம் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நற்றவம் புரிதற்குத் துணையுமாகும். வினையான் வரும் பிறவிக் கடலுள் அழுந்தும் ஆருயிர்கள் கரைசேரப் பற்றும் புணை இறைவன் அடித்தோணியே. அதுவே உயிர்களின் இளைப்பினை நீக்குவதாகும். அத்தோணியினைப் பெறுவிக்கும் வாயில் தவமும் அறமுமேயாம்.

(அ. சி.) திளைக் . . . . . யாமே - தவம், அறம் இரண்டுமே வினைக்கடல் கடக்க உயர்ந்த தோணிகள் போன்றன.

(9)

116. பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்றுங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.

(ப. இ.) அனைத்துயிர்க்கும் பற்றுக்கோடாக நின்றருளும் சிவ பெருமானைப் பற்றிய மெய்யன்பர் நிலமிசை யார்மாட்டும் எவ்வகையான குற்றமும் புகலார். அறநெறியல்லாமல் பிறநெறியிற் செல்லார். பிறநெறி பாவநெறி. அறவழியில் ஈட்டிய பொருளை அறவோர்க்கு மனமுவந்து உங்களால் கொடுக்கப்படுவது ஒன்றுமே உங்கட்கு வழித்துணையாகும். அம்மட்டோ? சிவபெருமான் தன் திருவடியைச் சேருமாறு வகுத்தருளிய நேர் வாயிலாகிய நன்னெறியினையும் நண்ணுவிக்கும். இதுவே நல்வழியினைக் கைக் கொள்ளும் வழியாகும். பற்றினை - பற்றப்படும் மெய்ப்பொருளாகிய சிவபெருமானை.

(அ. சி.) பற்றது . . . பற்று - பொருள். அண்ணல். . . வழி - சன்மார்க்கம்.

(10)


1. துன்பக். அப்பர், 4 - 92 - 6.