1350. பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர் சீரொளி யாகித் திகழ்தரு நாயகி காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம் பாரொளி யாகிப் பரந்துநின் றாளே. (ப. இ.) முச்சுடர்க்கும் ஒளிகொடுத்து மூவாப் பேரொளிச் சுடராய் விளங்குவது திருவருள். சிறந்த இயற்கைஒளியாத் திகழும் முழுமுதல்வி நீலமேனி வாலிழையினளாவள். அவள் என்றும் திரிபிலாக் கன்னி. பொன்னிறத்தையுடைய நிலவுலகத்தில் வாழ்கின்ற ஆருயிர் அனைத்திற்கும் அறிவொளியாக உடனாக நிறைந்து நின்றனள். (அ. சி.) காரொளி - நீல ஒளி. பாரொளி - உலகத்துக்கு ஒளி. (57) 1351. பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக் குவிந்த கரமிரு கொய்தளிர்ப் பாணி பரிந்தருள் கொங்கைகண் முத்தார் பவளம் இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே.1 (ப. இ.) திருவருளம்மையின் நான்கு திருக்கைகளுள் மேல் நோக்கிய இருகைகளும் பரந்த கைகள் எனப்படும். மார்பினிடத்தும் திருவடி சுட்டியும் விளங்குந் திருக்கைகள் குவிந்த கைகள் எனப்படும். பரந்த கைகள் இரண்டிலும் நீர்ப்பூக்களாகிய தாமரையும் குமுதமும் காணப்படும். குவிந்த கைகள் இரண்டிலும் விரல்கள் விரிந்து காணப்படுதலால் தளிரின் சாயல்போன்று காணப்படும். கொங்கைகளால் ஏனைத் தாயர் ஆருயிர்கட்கு உடல் வளமாம் உணவு நல்குவர். திருவருள்தாய் உயிர் வளமாம் உணர்வு நல்குவள். அதுவே திருநெறியதமிழ் பாடும் சீருணர்வாகும். அம்மையின் அருட்கொங்கைகள் அத்தகையன. அஃது ஆளுடைய பிள்ளையார்க் கருளிய திருமுலைப்பாலின் சிறப்பால் உணரலாம். அங்கொங்கைகள் முத்தணியும், பவழவண்ணமும், அகத்தமை மணியும், தன் கண்ணை மறைக்கும் கச்சுப்பூணுதலும் உடையன. 'உடுப்பார்தம் கண்மறைக்கும் உள்ளுடைகாண்பார்கண், தடுக்குமால் மேலாடை சார்ந்து' என்பதனை நினைவுகூர்க. (அ. சி.) பரந்தகரம் - அபயகரம். குவிந்தகரம் - சின்முத்திரைக்கரம். (58) 1352. மணிமுடி பாதஞ் சிலம்பணி மங்கை அணிபவ ளன்றி யருளில்லை யாகுந் தணிபவர் நெஞ்சினுள் தன்னரு ளாகிப் பணிபவர்க் கன்றோ பரகதி யாமே. (ப. இ.) மாணிக்கம் பதித்த திருமுடியும் சிலம்பணிந்த திருவடியும் உடைய மங்கை செந்நிறப் பொருள்கள் அணிவதன்றிக் கருமைநிறம் வாய்ந்த பொருள்கள் அணிபவளல்லள். பேரன்பு பூண்டு ஒழுகும் மெய்யடியார் நெஞ்சினுள் அருளால் விளங்கித் தோன்றுவள். தொழுது வணங்கும் தொண்டர்க்குத் திருவடிப்பேறு நல்குவள். (அ. சி.) தணிபவர் - கற்று அடங்கினவர். (59)
1. சிவனடியே. 12. சம்பந்தர், 70.
|