(ப. இ.) வாராத செல்வமாகிய திருவடிப்பேறும், வீடும் அவ்வவற்றின் சிறப்புக்களும் மயக்கமுறாவண்ணம் அருளுதலும், மெய்ப் பொருளுணர்த்தி பொய்ப்பொருளின் மயக்கறுத்தலும், அம் மெய்ப் பொருளை உள்ளவாறுணர்த்தும் திருநான்மறையின் முடிபும், அம் முடிபாற் பெறப்படும் சித்தாந்த நுண்ணுணர்வும் சிவகுரு வடிவெடுத்துச் சிவபெருமான் அருளாவிடின் ஒருவராலும் உணரவொண்ணாதென்க. (அ. சி.) நாதன் உருவாய் - நந்தி குருவடிவாய் வந்து. (12) 1560. பத்தியம் ஞானவை ராக்கிய மும்பர சித்திக்கு வித்தாஞ் சிவோகமே1 சேர்தலான் முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை சத்தி யருள்தரில் தானெளி தாமே. (ப. இ.) சிவன்பால் முழுமையன்பாம் பத்தியும், அப் பத்தியின் விளைவாம் திருவடியுணர்வும், அவ் வுணர்வால் ஏற்படும் வைராக்கியம் என்னும் பற்றுறுதியும் திருவடிப்பேற்றுக்கு வாயில்களாகும். இவற்றான் அவன் நான் ஆனேன் எனக் கருதுதலாகிய பாவனை உண்டாம். அப்பாவனையால் சிவனேயாவன். அதனால் வீடுபேற்றிற்கு வித்தாகிய திருவடியுணர்வு தோன்றும். அம் மெய்யுணர்வுத் தோற்றம் திருவருள் வழியாகக் கிடைக்கப் பெறுதலால் எளிதாயிற்றென்க. (அ. சி.) முத்தியின் ஞான முளைத்தலால் - முத்தியடைய இச்சை உண்டாகலான். அம் முளை-அந்த இச்சை. சத்தி அருள்தரில் - திருவருட் சத்தி அருளில். (13) 1561. இன்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படு மன்னெய்த வைத்த மனமது தானே.2 (ப. இ.) மேலோதிய சிறப்புக்கள் எல்லாம் எய்துதற்குரிய தென்னாட்டகத்துப் பிறக்கும் இன்பப் பிறப்பினை முன்னமே எய்தும்படி அருள் செய்த முழுமுதல்வனாகிய சிவபெருமானை எம் தலைவன் என்று வழுத்துவோம். அவன் திருவடியை ஆருயிர் அடையும் செவ்வி அருளால் எய்துங்காலத்து அச் சிவன் தானே வெளிப்பட்டருள்வன். அத்தகைய செவ்வி வாய்ப்பது அருளுக்குத் தனியிடமாக மனம் அமைந்தகாலத் தென்க. அங்ஙனம் அமைந்த மனம் ஏனைக் கருவிகளுக்குத் தலைமைப்பாடு எய்தும். (அ. சி.) இன் எய்த - இன்பம் எய்த. முன் எய்த - பிறப்பினை எய்த வைத்த. தன் எய்தும் - தன்னை அடையுங் காலத்தில். மன்.....தானே - பெருமை எய்த வைத்த உள்ளத்தின்கண்ணே. (மனம்: உள்ளத்துக்கு ஆகுபெயர்.) (14)
1. கண்டவிவை. சிவஞானசித்தயார், 9. 3 - 1. " முத்தி. சம்பந்தர், 2. 66 - 3. இந்திரிய. சிவஞானசித்தியார், 10. 2-1.
|