651
 

(அ. சி.) நீயொன்று செய்ய - ஆன்மாவின் கை ஒன்று செய்ய. தீயென்று - தீ உருவினனான சிவன் என்று. பேய் என்று - பேய்போல்பவன், சிவப்பித்துப் பிடித்தவன்.

(4)

1656. பஞ்சத் துரோகத்துப் பாதகர் தம்மையும்
1யஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற்
பஞ்சத்து ளாய்ப்புவி முற்றும்பா ழாகுமே.2

(ப. இ.) பொய், கொலை, களவு, கள், காமம் என்னும் ஐப்பெரும் பாவங்களும் அஞ்சாது நெஞ்சார இயற்றுவோர், நம்பகக் கேடுசூழ் பெரும் பாதகராவர். அவர்களையும் ஏனையோரும் அவ்வாறு செய்து பாதகர் ஆகாவண்ணம் அஞ்சி ஒழுகும்படி தண்டித்தல் வேந்தன் கடனாகும். அத் தண்டமாவது அக் கொடியோரை நாடுகடத்தலேயாம். அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டினில் மழை பெய்யாது விளைவு குன்றிப் பஞ்சமுண்டாகும்.

(அ. சி.) பஞ்சத் துரோகம் - பொய், கொலை, கள், களவு, காமம். பஞ்சச் சமயத்தோர் - பஞ்சாயத்தோர்; நியாயாதிபதிகள். விஞ்ச - மிகுதியாக. புவி வேறே - நாடு கடத்தி. பஞ்சத்துளாய். பஞ்சம் ஏற்பட்டு.

(5)

1657. தவத்திடை நின்றவர் தாமுண்ணுங் கன்மஞ்
சிவத்திடை நின்றது 3தேவர் அறியார்
தவத்திடை நின்றறி யாதவர் எல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடது வாமே.

(ப. இ.) சிவனை மறவாது செந்தமிழ்த் திருவைந்தெழுத்தோதி ஒழுகும் பெருந்தவத்திடை நின்றவர் உடம்புள்ள துணையும் ஊழ்வினை நுகர்வு நீங்காதாகலால் அத் தவத்தோர்க்கு அந் நுகர்வு உடலோடு நின்றுவிடும். அவர் உள்ளத்தின்கண் நின்றுநிலைபெறும் மாறில் நுகர்வு சிவ நுகர்வேயாம். இவ்வுண்மையினைச் செருக்கறாத் தேவரும் அறியார். நற்றவமாகிய சிவ வழிபாட்டில் நின்று அறியமாட்டாதவரெல்லாரும் பிறப்பிடை நின்று துன்புறுவர்.

(அ. சி.) உண்ணுங் கன்மம் - கன்ம அனுபவம். சிவத்திடை நின்றது - சிவானுபவமாக இருந்தது. பவத்திடை. பிறப்பினில். ஓர் பாடு - ஒப்பற்ற துன்பம்.

(6)

1658. கன்றலுங் கருதலுங் கருமஞ் செய்தலும்
தின்றலுஞ் சுவைத்தலுந் தீமை செய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்றிவை இறைவன்பால் இயற்கை அல்லவே.


(பாடம்) 1. பஞ்சச்.

2. முறைகோடி. திருக்குறள், 559.

3. இவனுலகில். சிவஞானசித்தியார், 10.