653
 

1661. மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான்
துன்னிய காமாதி தோயுந் தொழில்நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்
அன்னிய னாவன் அசற்சீட னாமே.

(ப. இ.) காரணத்தின்கண் மாறா நிலைபேறுடைய ஆணவம் கன்மம் மாயை மறைப்பாற்றல் மாயேயமாகிய காரியத்தன்மை ஆகிய மலம் ஐந்தும் மாற்றும் வழிவகைகளை ஆராயான்; பொருந்திய ஆறு கோடி மாயா சத்திகளாம் செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்தமானம், மாணாவுவகை என்னும் குற்றங்களில் மீண்டும் மீண்டும் விழும் செய்கையில் நீங்கான்; முற்றும் கலந்த பொய்ம்மையன்; பிறப்பு இறப்பு ஆகிய இவற்றிற்கு அஞ்சான். இத்தகையோன் நன்னெறிக்கு வேறான புன்னெறியனாவன். அவனே உண்மைக்கு மாறுபட்ட பொய்ம்மை மாணவனும் ஆவன். அசற்சீடன்: அசத் + சீடன், அசத் - பொய்ம்மை.

(அ. சி.) மலம் ஐந்து - ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி அல்லது வைந்தவன், ஓரான் - சிந்தியான். தோயும் - பொருந்தும். பின்னிய - நிறைந்த. அன்னியன் - உபதேசத்திற்குப் புறம்பாவான். அசற்சீடன - பயனற்ற சீடன்.

(10)


14. பக்குவன்
(மெய்க்குரு)

1662. தொழிலறி வாளர் சுருதிகண் ணாகப்
பழுதறி யாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தவரே.

(ப. இ.) செந்தமிழ் வேதாகமங்கள் கண்ணாகக் குற்றம் ஒரு சிறிதும் இல்லாத மேலான சிவகுருவின் திருவடியைச் சார்ந்து அவரை வழிபாடு செய்தலையறிவார் வீடுபேறு எய்தும் நன்னெறியறிவாராவர். இவ் வுண்மை அறியாதவர் பிறந்து இறந்து உழலும் அழிவுநெறியினையே அறிவர். அவர்கள் வீடுபேற்றுக்கு உரியர் அல்லாதவராவர்.

(அ. சி.) தொழில் - கன்மங்கள். சுருதி - வேதம், ஆகமம். பழுது - குற்றம். வழியறிவார் - வழிபட அறிவார். அழிவறிவார் - அழிவினைச் செய்யும் துன்மார்க்கம் அறிவார்.

(1)

1663. பதைத்தொழிந் தேன்பர மாவுனை நாடி
யதைத்தொழிந் தேன்இணி யாரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர
உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே.