687
 

8. சம்பிரதாயம்
(பண்டை முறை)

1747. உடல்பொருள் ஆவி உலகத்தாற் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்து
நொடியின் அடிவைத்து நண்ணுணர் வாக்கிக்
கடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.1

(ப. இ.) தென்னாடுடைய சிவன் ஆருயிர்களின் செவ்வி நோக்கிச் சிவகுருவாகத் தோன்றியருளி, அவர்தம் உடல் பொருள் ஆவி மூன்றனையும் அவர் அன்புடன் ஒப்புவிக்க அருளாற் கைக்கொண்டருள்வன். அவர்தம் எஞ்சுவினையாகிய சஞ்சிதம் பற்றறத் திருவுள்ளங்கொண்டு பார்த்தலாகிய திருக்கண்ணோக்கமும், கையை முடியில் வைத்தலும், திருவடியை முடியில் வைத்தலும், நுண்ணுணர்வாகிய திருவைந்தெழுத்தைச் செவியறிவுறுத்தலும் ஆகிய சிறந்த நன்னெறி நான்மைக் குறிப்பாஞ் சிவ தீக்கையைப் புரிந்தருள்வன். இச் சிவ தீக்கையால் வேறொன்றானும் போக்கப்படாத பிறப்பறும்; திருவடிப்பேறாம் சிறப்புறும்.

(அ. சி.) உடல்.....கொண்டு - பக்குவப்பட்ட ஆன்மாக்களுடைய உடல், பொருள், ஆவி மூன்றையும் அடிமையாகக்கொண்டு. படர்வினை - தொல்வினை (சஞ்சிதம்). கை வைத்து - தலையில் கை வைத்து, அடி வைத்து - தலையில் திருவடியைச் சூட்டி. நுண்ணுணர்வாக்கி - பசுகரணங்களைப் பதிகரணங்களாக்கி ஞான வடிவினனாகச் செய்து.

(1)

1748. உயிருஞ் சரீரமும் ஒண்பொரு ளான
வியவார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமுஞ் சிற்சத்தி யாதிக்கு
உயலார் குருபரன் உய்யக்கொண் டானே.

(ப. இ.) உயிரும் உடலும் நிலைப்பான சேர்க்கைசேர் சிறந்த பொருள்கள் என்று மகிழாதவர்தம் உயிருடலாகிய பாரத்தை உயிர்க் குயிராய்த் திகழும் சிவமும் சிற்சத்தியும் ஏன்றுகொள்ளும். அவ்வுயிர் கடைத்தேறும் வண்ணம் சிவபெருமான் தம்முதல் குருவுமாய் வந்து ஆண்டருளி ஏன்றுகொண்டனன். உயலார்: உயல் + ஆர்=கடைத்தேறும் வண்ணம் எழுந்தருளி நிறைந்த.

(அ. சி.) வியவார் - மகிழார். உயலார் - உய்யும்படி எழுந்தருளிய.

(2)

1749. பச்சிம திக்கிலே வைத்தஆ சாரியன்
நிச்சலும் என்னை நினையென்ற வப்பொருள்
உச்சிக்குங் கீழது வுண்ணாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே.


1. வந்தெனுடல். தாயுமானவர், ஆகார - 18.