(ப. இ.) உப்பங் கழியைச் சாரும் கடல் ஒலியினையும் அடக்கி மீதெழும் திருமுறைத் திருப்பாட்டு முழக்கங்களோடு மெய்யடியார்கள் மலர்கொண்டு வழிபடுவர். வழிபாட்டிற்குத் தகுதியில்லாத மொட்டனைய பொருள்களை விலக்கிவிடுவர். அறியாமையினால் சிவனை மறந்து தீநெறிக்கண் செல்லும் தீராப் பழி தீரும் வண்ணம் நல்லாரிணக்கத்தால் வழிபடுவோரின் உச்சியின்மேல் பொருந்தி வெளிப்பட்டு அருள்புரிவன். (அ. சி.) கழி....வழிப்படுவார் - கடல் ஒலியைத் தாழச்செய்து உரக்கத் தோத்திரங்கள் கூறி வழிபடுவோர். பழி வீழ - அஞ்ஞானம் நீங்க. வெளிப்படுவோர் - உண்மையான அன்பு நிறைந்த பூசனை புரிவோர். (12) 1804. பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப் பயனறி வார்க்கரன் தானே பயிலும் நயனங்கள் மூன்றுடை யானடி சேர வயனங்க ளாலென்றும் வந்துநின் 1றானே. (ப. இ.) சிவபெருமான் திருவடிக்கண் கொல்லாமை ஐந்தடக்கல் கொள்பொறுமை யோடிரக்கம், நல்லறிவு, மெய்தவம் அன்பெட்டுமாகிய நற்பண்புகள் திருவருளால் தமக்கு எய்தும் பொருட்டே புற அடையாளமாகப் புறத்தே நறுமலரெட்டிட்டு வழிபடுகின்றனர். அவர்களே பயனறிவு படைத்தவராவர். அவர்தம் அன்புடை உள்ளத்துச் சிவ பெருமான் எழுந்தருளி ஆட்கொள்வன். மூன்று திருக்கண்களையுடைய சிவன் தன் திருவடியில் கூடுவதற்குத் தமிழ் வழிபாடே காரணம் என்க. வயனம்: வயணம் - காரணம். (அ. சி.) பயன் அறிவு - மெய்ஞ்ஞானம். வயனம் - காரணம். (13) 1805. ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்று ஆர்த்தெம தீசன் அருட்சே வடியென்றன் மூர்த்தியை மூவா முதலுரு வாய்நின்ற தீர்த்தனை யாருந் துதித்துண ராரே.2 (ப. இ.) இறைவனாகிய சிவபெருமான் திருவடியைப் பன்மலர் தூவித் திருமுறை ஓதிப் பேரன்பின் பெருமுழக்குடன் வழிபடுவர். அத்தகைய இன்பத் திருவுருவனை, அழிதல் இல்லாத வினைமுதற் காரணனை, ஆருயிர்களின் மலப்பினிப்பிணின்று தீர்த்தருளி அவ்வுயிர்களை ஆட்கொள்ளும் தூயோனை, நன்னெறிப் புகாதார் யாரும் வழிபட்டுணரார். தீர்த்தன் - தூயோன். வினைமுதற் காரணம் - நிமித்த காரணம். (அ. சி.) மூவாமுதல் - கெடாத காரணமாய். (14)
1. எட்டு. அப்பர், 5. 54 - 1. " எல்லாம். " 6. 5 - 1. " அயனை, 8. திருச்சாழல், 4. 2. தீர்த்தனைச். அப்பர், 5. 2 - 2. " தொழுது. " 5. 21 - 8.
|