13. மகேசுவர பூசை 1821. 1படமாடக் கோயிற் பகவற்கொன் றீயில் 2நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா 3நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில் 4படமாடக் கோயிற் பகவற்க தாமே. (ப. இ.) அருஞ்சைவர் தத்துவம் ஆறாறினையும் பிண்டவடிவிற் காட்டும் படம்போல் விளங்குவது திருக்கோவில். இது நின்றுபயன் அளிக்கும் அருள் நிலையம். சிவனை மறவா நினைவுடன் யாண்டும் இயங்குவாரின் திருமேனி நடமாடும் திருக்கோவில் என்ப. அவர்தம் மறவா நினைவுக்குரிய இடங்கள் எட்டென்ப. அவை நிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல், மெல்லல், துயிலல், விழித்தல், இமைத்தல் என்ப. நடமாடும் திருக்கோவில் சென்று பயனருளும் சிறப்புடைத் திருக்கோவிலாகும். இத் திருக்கோவிற்குச் செய்யும் சிறப்பு முழுவதும் படமாடக்கோவிற் பரமனார் திருவடிப்பால் சாரும். ஆனால் படமாடக் கோவில் வழிபாடு ஆண்டே தங்கி நடமாடக் கோவிலை நண்ணுவதில்லை. இவை யிரண்டும் முறையே கல்லெழுத்தும் கருத்தழுத்தமும் ஆகும். "எவரேனும் தாமாக இலாடத்திட்ட. திருநீறு" என்பது அப்பர் அருண்மொழி. 'தாமாக' என்பது தாம் சிவமாக: எனவே சிவனடியாரே என்பதாம். கண்ணிற்காணும் இவரே சிவமாவர். காணா அவர் சிவமெனக் கருதற்க. (அ. சி.) படம் மாடக்கோயில் - மாடங்களையுடைய கோயிலானது தத்துவங்களைக் காட்டும் படம்போன்ற அந்த இல்லில் இருக்கும். நடம்மாடக்கோயில் ஆதாரங்களாகிய மாடங்களையுடைய நடமாடும் தேகமான கோயிலில் இருக்கும். (1) 1822. தண்டறு சிந்தை தபோதனர் தாமகிழ்ந் துண்டது மூன்று 5புவனமும் உண்டது கொண்டது மூன்று புவனமுங் கொண்டதென்று எண்டிசை நந்தி எடுத்துரைத் தானே. (ப. இ.) சிவனை மறவாத சிந்தை தண்டறு சிந்தை அந் நாட்டத் தினையுடையோர் இறவாத் தபோதனர். அவர்கள் அருளால் மகிழ்ந்து உண்டது மூன்று உலகமும் முற்ற உண்டதாகும். மூன்று உலகம் அவன் அவள் அது எனும் அவை. அதுபோல் அவர் ஏற்றுக்கொண்டதும் மூன்று உலகமும் ஏற்றுக்கொண்டதாகும். இவ் வுண்மையினை எட்டுப்புலன்களிலும் என்றும் நிறைந்து நின்றியக்கும் நந்தியாகிய சிவபெருமான் நல்லருளால் நல்லார்க்கு நவின்றருளினன். (அ. சி.) தண்டறு - நீங்குதல் இல்லாத. கொண்டது - உட்கொண்டது. எண்டிசை - எங்கும் புகழ்பெற்ற. (2)
(பாடம்) 1. படமாடுங். 2. நடமாடுங். 3. நடமாடுங். 4. படமாடுங், 5. நீலமேனி. ஐங்குறுநூறு, கடவுள் வாழ்த்து.
|