(ப. இ.) நல்ல குகையின் மேற்பரப்பு நால்வட்டம் சேர்ந்ததாயிருத்தல்வேண்டும். வணங்கும் மெய்யடியார்கள் முழந்தாள் இரண்டு, முன்கைஇரண்டு நெற்றிஒன்று ஆக ஐந்துறுப்பும் நிலத்தே படும்படி வணங்கத்தக்க இடம் வாய்ப்புள்ளதாக இருத்தல்வேண்டும். அதன் பொருட்டு ஒன்பது அடிநீளம் இடம் அமைத்தல்வேண்டும். இக் குறிப்பால் திருக்கோவில்களில் பலிபீடத்தின் முன்னும் அதன் வெளியிலும் எட்டுறுப்பும் நிலத்தேபடும்படி நலத்தே வணங்குதல்வேண்டும். மற்றுத் திருவுருவங்களின்முன் ஐந்துறுப்பும் நிலத்தேபடும்படி வணங்குதல் வேண்டும் என்னும் நெறிமுறை தோன்றுதல் காண்க. அழகிய குகை அமைப்பும் மூன்று நிலையதாய் மூன்று சுற்றுள்ளதாய் அழகியதாய் அமைதல்வேண்டும். வழிபாட்டில் உறைத்துநிற்கும் மெய்யன்பர்கள் செய்யும் நேர்மைகள் மேலோதியனவாகும். (அ. சி.) நால்வட்டம் - நாலாபக்கம். பஞ்சாங்க பாதமாய் - அஞ்சு அங்கங்கள் நிலத்தில் பதியும்படி வணங்குதற்கு இடமுள்ளதாய். நவபாதம்-ஒன்பது காலடி. ஓசம் - குகை, கோயில். (7) 1880. பஞ்சலோ கங்கள் நவமணி பாரித்து விஞ்சப் படுத்ததன் மேலா சனமிட்டு முஞ்சி படுத்துவெண் ணீறிட் டதன்மேலே பொன்செய்நற் சுண்ணம் பொதியலு மாகுமே. (ப. இ.) நிலவறைக் குகையின் அடிப்பகுதியில் பசும்பொன், வெண்பொன், செம்பொன், வரைபொன், கரும்பொன் என்னும் ஐவகைப் பொன்னும், ஒன்பான் ஒளிக்கற்களும் அமைத்தல்வேண்டும். இவற்றின் மேல் இருக்கையமைத்தல்வேண்டும். அதன்மேல் தருப்பைப்புல் பரப்புதல் வேண்டும். திருவெண்ணீறு குவித்தல்வேண்டும். அதன்மேல் திருமேனியை வைத்தல்வேண்டும். அதன்மேல் அழகிய சுண்ணச் சாந்து பூசிப் பொதிதல்வேண்டும். பொன்னைந்தும் முறையே தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு எனப்படும். வரைபொன் - ஈயம். வரைதல் - எழுதுதல். பொன் என்னும் சொல் பொது என்பது "தூண்டிற் பொன்" என்பதனாலுணர்க. (அ. சி.) முஞ்சி - தருப்பைப் புல். சுண்ணம் - சாந்து. பொதியல் - பூசுதல். (8) 1881. நள்குகை நால்வட்டம் படுத்ததன் மேற்சாரக் கள்ளவிழ் தாமங் களபங்கத் தூரியுந் தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து ஒள்ளியநற் றூபம் உவந்திடு வீரே. (ப. இ.) குகை நடுவில் நால்வட்டம் அமைத்து அதன்மேல் தேன் நிறைந்த மலர்மாலைகள், சந்தனக் கலவை, கத்தூரி முதலிய மணக்கூட்டுக்கள், சாந்து, புனுகு, பன்னீர்சேர்த்துத் தக்கவாறு பொதிதல் வேண்டும். பின் சிறந்த நறும்புகையும் விரும்பி மகிழ்ந்து இடுவீர்களாக. (அ. சி.) நள் குகை - குகை நடுவில். (9)
|