2126. படியுடை மன்னவன் பாய்பரி ஏறி வடிவுடை மாநகர் தான்வரும் போது அடியுடை ஐவரும் அங்குறை வோருந் துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.1 (ப. இ.) உடம்பைத் தனதாகக்கொண்டு ஆளும் ஆருயிர் இடையறாது ஓடிக்கொண்டே இருக்கும் இயல்புவாய்ந்த மனமாகிய குதிரை மீது ஏறி அழகுமிக்கதாகிய அகநகரின்கண் வலம் வருகின்றது. அப்பொழுது அறிதற்கருவியாகிய செவி முதலிய ஐந்தும் செய்தற் கருவி முதலிய பிற கருவிகளும் புடைபெயராது உறங்கிக்கிடக்கும். அவைகளின் பற்றுக் கோட்டுக்கு இடனாகத் துடித்துக்கொண்டிருக்கும் இயல்புவாய்ந்த நெஞ்சம் துடியில்லம். அந் நெஞ்சத்தைப்பற்றி உறங்குகின்றனர். (அ. சி.) படியுடை மன்னவன் - ஆன்மா. பாய்பரி - சலிக்கும் மனம். ஐவர் - ஞானேந்திரியங்கள் உறைவோர் - கன்மேந்திரியங்கள். துடியில்லம் - இதயத்தானம். (24) 2127. நேரா மலத்தை நீடைந் தவத்தையின் நேரான வாறுன்னி நீடு நனவினில் நேரா மலமைந்து நேரே தரிசித்து நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே. (ப. இ.) ஐம்மலச் சூழலில் பிணிப்புண்டு செம்பொருளையறியாது துன்புறும் ஆருயிர்க்கிழவர் தமக்கு நேராகாத மாறாப் பிறவியில் தள்ளும் அம் மலங்களைத் திருவருளால் ஐம்பாட்டில் காண்குவர். காண்பரென்பது நோயால் ஆற்றல் குறைந்தவர் அவ் வாற்றலின் குறைபாட்டைப் புடைபெயர இயலாமையாகிய தம் குறைபாட்டில் வைத்து உணர்வதுபோன்ற தென்பதாம். அதுபோல் ஆருயிர்களும் ஐம்பாடாகிய ஐந்தவத்தையில் தம்மையும் செம்பொருளாம் சிவனையும் உணர்வதாகிய இன்பம் இழந்து உணராததாகிய துன்பம் உழந்து வருந்தும் என்பதாம். அம் மலங்கள் நேரானவாறு நினைப்பதற்கு இடம் பெருகிய நனவினில் ஆகும். நேராவது விட்டு நீங்குவது. நனவினில் அவ் வுண்மையை அருளால் கண்டவர் செம்மையாகவே நிற்கும் செம்பொருளாம் சிவத்துடன் உணர்வு நீங்காது ஒட்டி என்றும் இன்புறுவர். இதுவே நிலைபெற்ற உலைவில்லாத நித்தவாழ்க்கை என்பர். நித்தம்: எந்நாளும்; நில் என்னும் அடியாகத் தோன்றிய நிலை என்னும் பொருளில் நிற்றம் என்றாகிப் பின் நித்தம் என்றாயிற்று. (25) மத்திய சாக்கிராவத்தை 2128. சாக்கிர சாக்கிரந் தன்னில் திரோதாயி சாக்கிர சொப்பனந் தன்னிடை மாமாயை சாக்கிரந் தன்னிற் சுழுத்திதற் காமியஞ் சாக்கிரந் தன்னில் துரியத்து 2மாயையே.
1. படியுடையார். திருக்குறள், 606. 2. இலாடத்தே. சிவஞானபோதம், 4. 3 - 1.
|