859
 

(அ. சி.) ஏலங்கொண்டு - பயிற்சி செய்து. குணம் - அநுபவம். மூலம் - மூலாதாரம். முறுக்கி - நாடிகளை நிமிர்த்தி. முக்கோணி - மூன்று மண்டலம். காலங்கொண்டான் - சிவன்.

(7)

2135. நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி யிருந்திடுங்
கூடிய காமங் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.

(ப. இ.) நாடிகள் பத்தும், வளிகள் பத்தும் உயிர்ப்புப் பயிற்சி முறையான் நடுநாடிவழியாகச் சென்று ஒடுங்குதலைப் பெறும். அக் காலத்து மிகுந்த இன்பமும், நுகரும் சுவையும், சிவபெருமானையே நல்ல மனதுடன் நாளும் நினைக்கும் நற்புண்ணியமும் எய்தும். இந் நன்மைகளே அந் நல்லுடலில் திகழும். நாடி பத்தாவன: இடப்பால் நரம்பு, வலப்பால் நரம்பு, நடு நரம்பு, உள்நாக்கு நரம்பு, வலக்கண் நரம்பு, இடக்கண் நரம்பு, வலச்செவி நரம்பு, இடச்செவி நரம்பு, கருவாய் நரம்பு, எருவாய் நரம்பு என்பன. இவற்றை முறையே இடைகலை, பிங்கலை, சுழுமுனை, சிகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு எனவும் கூறுப. வளி பத்தாவன: உயிர்வளி, மலக்காற்று, தொழிற் காற்று, ஒலிக் காற்று, நிரவு காற்று, தும்மற் காற்று, விழிக் காற்று, கொட்டாவிக் காற்று, இமைக் காற்று, வீங்கற் காற்று என்பன. வளி என்றாலும் காற்று என்றாலும் ஒன்றே. இவற்றை முறையே பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனவும் கூறுப.

(அ. சி.) கால் - பிராண வாயு.

(8)

2136. பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமு மேலைத் துரியமுந்
தத்துவ நாலே ழெனவுன்னத் தக்கதே.1

(ப. இ.) அறிதற்கருவியாகிய செவி, மெய், கண், வாய், மூக்கு ஆகிய ஐந்தும்; செய்தற்கருவியாகிய வாய், கால், கை, எருவாய், கருவாய் ஆகிய ஐந்தும் இவற்றிற்குரிய புலன் பத்தும். அவை வருமாறு: ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய ஐந்தும்; நவிலுதல், நடத்தல், நலமுறக் கொடுத்தல், கழித்தல், களித்தல் ஆகிய ஐந்தும் சேர்ந்து பத்து என்ப. எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு ஆகிய அகப்புறக் கலன் நான்கும், துரியமாகிய ஆள் ஒன்றும் காலம் ஒன்றும், வியோமம் என்று சொல்லப்படும் ஆண்டான் ஒன்றும், மேலைத்துரியம் அல்லது திருவருட் பேருறைவு என்று சொல்லப்படும் அத்தன் அல்லது சிவன் ஒன்றும் ஆகிய இருபத்தெட்டு மெய்களும் முன் (2133) ஓதப்பெற்ற வேதாந்த மெய்ந்நெறித் தத்துவங்களாகும். காலம் என்பதற்கு ஆருயிர் என்றலும் ஒன்று. ஆருயிர் - ஆன்மா.


1. பொருள்கருவி. திருக்குறள், 675.