2245. சீவன் துரிய முதலாகச் சீரான ஆவ சிவன்துரி யாந்தம் அவத்தைபத்து ஓவும் பராநந்தி யுண்மைக்குள் வைகியே மேவிய நாலேழ் விடுத்துநின் றானன்றே. (ப. இ.) ஆருயிரின் பேருறக்க நிலையாகிய சீவதுரிய முதல் சிவதுரியம் ஈறாக நிலைகள் பத்தென்ப இப்பத்து நிலையினையும் அருளால் கண்டு நீங்க ஆண்டு நிலைபெற்றுள்ள பராநந்தியாகிய சிவபெருமான் திருவடிக்கீழ்த்தங்கி நிலைபத்தும் அப்பால் நிலையொன்றுமாகிய பதினொன்றினையும் விடுத்து ஆருயிர்க் கிழவன் இன்புற்றிருந்தனன் என்க. நாலு+ஏழ்-பதினொன்று நாலேழ்: உம்மைத்தொகை நிலைபத்தாவன: சீவ துரியம், சிவதுரியாதீதம் ஆக இரண்டு. மேல்நனவு, மேற்கனவு, மேலுறக்கம், மேற்பேருறக்கம் ஆக நான்கு. சிவநனவு, சிவக்கனவு, சிவவுறக்கம், சிவப்பேருறக்கம் ஆக நான்கு. இம் முத்திறத்துப்பத்து நிலை என்க. (அ. சி.) சீவன்.....பத்து - (1) சீவதுரியம், (2) சிவதுரியாதீதம், (3) பரநனவு, (4) பரகனவு, (5) பரசுழுத்தி, (6) பரதுரியம், (7) சிவநனவு, (8) சிவக்கனவு, (9) சிவசுழுத்தி, (10) சிவதுரியம். (16) 2246. பரஞ்சிவன் மேலாம் பரமம் பரத்திற் பரம்பரன் மேலாம் பரநன வாக விரிந்த கனாவிடர் வீட்டுஞ் சுழுனை உரந்தகு மாநந்தி யாமுண்மை தானே. (ப. இ.) பரம் சிவன் இரண்டற்குமேல் பரமம். அப் பரத்திற்கு மேல் பரம்பரன். பரநனவு விரிந்த பரக்கனவு இவ்விரண்டும் ஆருயிர்களின் பிறப்புத் துன்பத்தை அகற்றும். அதன்மேல் பேரறிவுப் பெருமானாகிய பர நந்தியின் உண்மைநிலையினை எய்துவன். (17) 2247. சார்வாம் பரசிவஞ் சத்தி பரநாதம் மேலாய விந்து சதாசிவ மிக்கோங்கிப் பாலாய்ப் பிரமன் அரியம ராபதி தேவாம் உருத்திரன் ஈசனாங் காணிலே.1 (ப. இ.) எப்பொருட்குஞ் சார்பென நின்று எஞ்ஞான்றும் இன்பவடிவமாய் இலங்கும் மெய்ப்பொருள் பரசிவம், சத்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவம், ஈசன், அரன், அரி, அயன் என்னும் ஒன்பது நிலையுள் நிற்கும். இது பரநிலையாகும். இந்நிலையினை எய்திய ஆருயிர்க்கிழவரும் இப் பொயர்களையே பெற்று வாழ்வர். சதாசிவ மெய்யாகிய அருளோன் அருஉருவநிலை. மிக்கோங்கிய இந் நிலையினின்றே உருவநிலை நான்கும் தோன்றும். அரிய அமராபதித்தேவு என்னும் உருத்திரருக் கடக்கமே வானவரும் வானவர்கோனாகிய இந்திரனும் என்க. (அ. சி.) இம் மந்திரம் பர அவத்தை உடையவர் பரசிவ முதல் அயன் ஈறாக ஒன்பது வடிவமாய் விளங்குவர் என்றது. (18)
1. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 2.
|