மாகும். அரனிலையாகிய படமாடுந் திருக்கோவிலை ஆராய்வார்க்கு அருளால் இவ்வுண்மைகள் புலனாகும். எனவே திருக்கோவில் திருவுருவங்கள் மூவா முப்பொருள் உண்மை செப்பும் உருவெழுத் தோவியத்தவாத் திரு நூலாகும். ஆனேற்றின் முன்பின் பலிபீடம் அமையும் குறிப்பு வருமாறு: பாசமுன்னாகில் பலிபீடம் முன்னாம்பின், நேசமுதல் முன்னொளியால் நேர்: (அ. சி.) இம் மந்திரம் "பிண்டத்தின் அமைப்பே கோவில்" எனக் காட்டுகின்றது. இந்தக் கருத்தையே "படம் மாடக்கோயில்" என்று வேறோர் இடத்தில் கூறியுள்ளார். கோயிலில் சிவ சந்நிதியில் இரண்டு நந்திகள் உண்டு. ஒன்றுகோயில் முகப்பில் உள்ளது. இன்னொன்று சிவலிங்கத்தின் அணித்தாய் உள்ளது. முகப்பில் உள்ள நந்திக்குப் பலிபீடம் முகத்தின் பக்கம் உள்ளது. இலிங்கத்துக்கு அணித்தாயுள்ள நந்திக்குப் பலிபீடம் வாலின் பக்கம் உள்ளது. இதன் பொருள் என்னவென்றால் சிவன் ஆன்மாவுக்குத் தூரமாய் இருக்கும்பொழுது பாசம் ஆன்மாவின் முன்னால் இருக்கும். சிவத்தைக் கிட்டினால் பாசம் பின்னால் மறைந்துவிடும் என்பதே. அஃதாவது தற்போதம் உள்ளவர்க்குப் பாசம் முந்தியும், தற்போதம் இழந்தவர்க்குப் பிந்தியும் இருக்கும் என்பதே. (7) 2373. பதிபசு பாசம் பயில்வியா நித்தம் பதிபசு பாசம் பகர்வோர்க் காறாக்கிப் பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும் பதிபசு பாசம் பயில நிலாவே. (ப. இ.) பதி பசு பாசம் என்னும் முப்பொருளையும் நிலை வேறுபாட்டால் விரித்தும் தொழில் ஒற்றுமையால் தொகுத்தும் ஐம்பொருள்களாக அமைத்தனர் அருஞ்சைவர். அவையே 'சிவய நம' என்ப. பதியாகிய சிகரத்தின் நிலைவேறுபாட்டால் வகரமும் நகரமும் என விரிந்து மூன்றாயின. மலகன்ம மாயைகளின் தொழில் பெரும்பான்மையும் மறைத்தலும் மறைத்தற்குத் துணைபுரிதலும் ஆம். அதனால் அம் மூன்றையும் மகரம் என ஒன்றாயடக்கியும், யகரமாகிய ஆருயிர் என்றும் சார்ந்து நின்றதே உயிர்நிலை என வழங்கும் இயல்பிற்றாதலின் வகர நகரங்கட்கு நடுவாய் ஒன்றாயின. வகரம் நற்றாயாகவும் நகரம் செவிலித்தாயாகவும் பெரும்பாலும் கொள்ளற்கியையும். செவிலிக்கு உடலுயிர் ஓம்பற்காம் பொருள் கூட்டும் பணியும், நற்றாய்க்கு உணர்வுயிர் ஓம்பற்காம் அருள் கூட்டும் பணியும் இயல்பாக அமைந்துள்ளன. பதி பசு பாசம் மூன்றும் மீநிறைவு வீழ்நிறைவு மிடைநிறைவு என்ற முறையில் ஒன்றனுள் ஒன்று அடங்கி விளங்கும். இவற்றை முறையே வியாபகம் வியாப்பியம் வியாத்தி என்ப. பதி மீநிறைவாகும். பசு வீழ்நிறைவாகும், பாசம் மிடைநிறைவாகும். இம் முப்பொருள் உண்மை விரிக்கும் திருவைந்தெழுத்தை நாளும் இடையறாது பொருட் குறிப்புடன் ஓதி வருதல் வேண்டும். அங்ஙனம் பயின்று வருவார்க்கு நன்னெறி நான்மையின் வழியினை அருளிச்செய்வாராய் வழியமைத்தனர். அந் நெறி நிற்பார்தம் பசு பாசப்பற்றை அறவே நீக்கியருள்வன். அத் திருவருள் கிட்டியபின் பசு பாசம் ஒளிமுன் இருள் போன்று அவ்வாருயிர்க்கண் நில்லாவென்க. (அ. சி.) பயில்வியா நித்தம் - நாள்தோறும் செய்யும் அஞ்செழுத்து எண்ணும் முறை. ஆறாக்கி - வழியை உண்டாக்கி. (8)
|