971
 

(ப. இ.) சிவபெருமான் நிலமும் அண்டமும் கீழும் மேலும் பொருந்தும் வண்ணம் பேரொளிப் பிழம்பாய் நின்றருளினன். அவ்வாறு அன்று நின்றருளியது அசுரரும் அமரரும் உய்ந்திடும்படி ஆள்வதற்கேயாம். அவனே பின்பு உலகம் படைத்தருளினன். அவன் திருப்பெயர் நந்தியாகும். அவன் திருவடி அடியேன் தலையின்கண் அமர்ந்தது.

(3)

2389. சிந்தையி னுள்ளே எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் 1கீழது
எந்தையும் என்னை யறியகி லானாகில்
எந்தையை யானும் அறியகி 2லேனே.

(ப. இ.) சிவபெருமானாகிய எந்தையின் திருவடி அவனருளால் அடியேன் எண்ணமாகிய சிந்தையின்கண்ணேயுள்ளது. அடியேன் சிந்தையும் எந்தையின் திருவடிக்கீழ் அமர்ந்துள்ளது. எந்தையும் அடியேனை அருள் உள்ளத்தால் நோக்குவதாகிய அறிதலைச் செய்யானாகில் எந்தையாகிய அவனை அடியேனும் அறிந்துகொள்ளும் வாய்ப்பினை எய்துவேன் அல்லேன். இது கற்பிக்கும் ஆசான் மாணவ கனையும் ஈன்றார் மக்களையும் உரிமையுடன் நோக்காராயின் அம்மக்கள் அவர்களை எங்ஙனம் ஆசான் ஈன்றார் என அறிவர்? மூத்தோர் முன்னறிந்து முறையுணர்த்திய பின்னரே இளையோர் அம் முறைவழி நின்று ஒழுகுவர் என்பவற்றோடொத்ததாகும் இது.

(4)

2390. பன்னாத பாரொளிக் கப்புறத் தப்பால்
என்னா யகனார் இசைந்தங் கிருந்திடம்
உன்னா ஒளியு முரைசெய்யா மந்திரஞ்
சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.

(ப. இ.) நெருங்கவொண்ணாத ஆறாதார அகநிலை ஒளிக்கு அப்புறமாய் அதன்மேலுமாய் விளங்குவது அருட்பெரும் அறிவுப் பெருவெளி. அங்குப் பொருந்தி எழுந்தருளியிருப்பவன் என் முழுமுதற்றலைவனாகிய சிவபெருமானாவன். அவனது அளவில் பேரொளியை உன்னுதல் செய்யவும் ஒண்ணாது. அவனது திருப்பெயராம் மந்திரத்தை உரைத்தல் செய்யவும் ஒண்ணாது. உன்னுங்கால் ஏதாவது ஓர் உருவம் உன்னுங் கருவியாகிய மனத்துமுன் தோன்றும். உரைக்குங்கால் ஒலிவுருவம் செவிப் புலனாகும். இவ்விரண்டையும் கடந்து விரவிநின்றுணரும் மேல் நிலையாதலின் அங்ஙனம் ஒதியருளினர். அவற்றை அவன் அருளால் உணர்வின்கண் உணர்த்தியருளினன். அதனால் ஆருயிர்க்கிழவன் அவன் திருவடியைத் தலைச் சூடிநின்றனன். தலைச்சூடுதல், தலையன்பால் தலையிற்சூடுதல்.

(அ. சி.) பார்ஒளி - ஆதார ஒளிகள், அப்புறத்தப்பால் - பரமாகாய முடிவில். உன்னா வொளி - கருதப்படாத ஒளி, உரைசெயா மந்திரம் - வாயினால் உச்சரியாமல் உரைக்கும் மந்திரம்.

(5)


1. தருக்கின. அப்பர், 4. 91 - 4.

" பைம்மா. " 4. 84 - 10.

" நித்த. 8. அன்னைப்பத்து, 3.

2. என்னை. அப்பர், 5. 92 - 8.

" நானார். 8. திருக்கோத்தும்பி, 2.