980
 

(ப. இ.) அருஞ்சைவர் கொள்ளும் முப்பத்தாறு (2139) மெய்களையும் கடந்து அப்பால் விளங்குவது முழுமுதுற் சிவமாகிய அப்பெரும் பொருள். பரம் - பெரும்பொருள். சொல்லாது சொல்லும் கைவிர (2385) லடையாளமாகிய செவியறிவுறூஉ சிவபரத்தைப் பற்றியதாகும். செவியறிவுஉ - உபதேசம். சிறப்பாக வெளிப்பட்ட அருளோன் மெய்க் கண்ணுள்ள செந்தமிழ்மறையை வெளிப்படுத்தருளிய பகவனாராவர். அவர்தம் திருவடியுணர்வால் பெறற்கரும் பேறாகிய பேரின்பப் பேறு நம்மைப் பெருகப் பேணும் என்க. தன்னை நினைவாரைத்தான் முன்னினையுந் தணவாத் தண்ணளியோன் சிவன்.

(அ. சி.) கூறா உபதேசம் - சொல்லாமற் சொல்லுதல், குறிப்பாலுணர்த்தல். வேத் பகவனார் - வேதத்தை வெளியிட்ட சதாசிவனார்.

(3)

2409. பற்றறப் பற்றிற் பரம்பதி யாவது
பற்றறப் பற்றிற் பரனறி வேபரம்
பற்றறப் பற்றினிற் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றிற் பரம்பர 1மாகுமே.

(ப. இ.) உலகியற் பற்றுக்கள் ஒழிக்கவேண்டிய நிலவிய சிவபெருமான் பற்றினைப் பற்றுக. அதுவே மேலாகிய பதியின் திருவடியைப் பற்றுவதற்கு வாயிலாகும். அங்ஙனம் எப்பற்றுமின்றி அம்மெய்ப் பொருள்பற்று ஒன்றுமே கொண்டு 'அன்பறாது என்நெஞ்சவர்க்கு' என்ற முறையிற் பற்றிநிற்பின் அவ்வுயிர் சிவபரமேயாகும். பற்றறச் செய்யும் பற்றாகிய திருவடியைப் பற்றின் சிவபெருமானுடன் இரண்டறக் கலந்து இறவா இன்பம் எய்தும் எழினிலை வாய்க்கும். அத்தகைய வல்லோர் நல்லோரால் பரம்பரம் என்று அழியாப் புகழுடன் அழைக்கப்படுவர்.

(அ. சி.) பற்று - உலகப் பற்று, பரன் அறிவு - சிவஞானம், பரம் பரமாம் - ஆன்மா சிவமாம்.

(4)

2410. பரம்பர மான பதிபாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரஞ்சிவ மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்ப தறிவே.

(ப. இ.) திருவருளால் தொன்றுதொட்டு வழிவழியாகத் தோன்றாத் துணையாக நின்றருளும் பதியினைப் பற்றினால் பாசம் பற்றாவாகும். யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடைய சிவபெருமான் திருவடியினைப் பற்றினார்க்கு அவன் எழுந்தருளிவந்து இன்புறுத்துவன். அதுவே மேலான திருவடியின்பமாகும். இவையனைத்தினையும் திருவடியுணர்வால் திருவருள் உந்துவதால் அறிவதே நிலைபெற்ற அறிவாகும்.

(அ. சி.) பரம்பரமாகும் பரம் - ஆன்மா; பரம்பரமாக - முறையாக.

(5)


பாசத்தை. அப்பர், 6. 31 - 6.