ஏற்படின் மருவி இன்புறினும் விந்து வெளிச் செல்லுவதில்லை. ஆதலால் பாய்ந்ததும் இல்லை என்றனர். பாணவம்; பண்ணவம் என்பதன் செய்யுள் திரிபு. பண்ணவம் - திண்மை. (27) 463. பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும் பாய்ந்தபின் னாலோடில் பாரினில் எண்பதாம் பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே. (ப. இ.) காதலர் இருவரும் மருவிக் கூடியபின் வாரசரம் (மூன்றாம் தந்திரம், 16. வாரசரம்) முறைப்படி உயிர்ப்பு ஐம்பூதங்களிலும் பரந்து ஓடினால் பிறந்த உயிர்க்கு அகவை நூறு ஆகும். நான்கு ஓடினால் அகவை எண்பதாகும். இம்முறையாகச் செல்லும் மூச்சினைப் பகுத்தறிந்து காண்க. யோகமுறையில் கூடுபவர் உயிர்ப்பினையுணர்ந்து வேண்டியவாறு செலுத்துதலும் கூடும். மேலும் தந்தையின் உயிர்ப்பு ஐந்துமுறை ஓடினால் மகவுக்கு அகவை நூறெனவும், நான்குமுறை ஓடினால் எண்பது எனவும் கூறுதலும் ஒன்று. (28) 464. பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும் பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும் பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும் பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே. (ப. இ.) சர ஓட்டஞ் செல்கின்ற உயிர்க்காற்று அளவிற் குறைந்தால் பிறக்கும் மகவும் குறுகிய வடிவமாகப் பிறக்கும். அம் மூச்சு நெடுந்தொலைவு ஓடி இளைத்தவன் மூச்சுப் போல் இளைத்துப்போனால் பிறக்கும் மகவு முடமாகும். அம் மூச்சு இடைநிலைப்பட்டிருந்தால் கூனாகும். இவ்வாராய்ச்சி அனைத்தும் ஆண்பாலார்க்கே அன்றிப் பெண்பாலார்க்கு இல்லை. (29) 465. மாதா உதரம் மலமிகில் மந்தனாம் மாதா உதரம் சலமிகில் மூங்கையாம் மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே. (ப. இ.) இருவரும் மருவுங்கால் தாயார் வயிற்றில் மலம் துப்புரவாகக் கழியாமல் தங்கி மிக்கிருந்தால் பிறக்கும் மைந்தன் மந்தனாவன். அதுபோல் நீரல் நீராகிய சிறுநீர் மிகுந்திருந்தால் பிறப்பது ஊமையாகும். இரண்டும் ஒப்ப இருக்குமானால் குருடாகும். இங்ஙனம் நோவது தாய் வயிற்றுத் தோன்றும் சேய்க்கு என்க. (மகப்பேறு ஆண்டவன் திருவருட்பேறாம் தவநிலை. அதனால் இருவரும் தூயராய்ச் சிவனினைவுடன் உடனுறைவின்பந் துய்த்தல் வேண்டும்.) (அ. சி.) இரண்டு - மலமும் சலமும். (30)
|