346
 

அதனால் சிறப்பு எய்திய தம்மை உய்யும்வழி செய்தவராவர். விரகு - வழிவகை (உபாயம்).

(அ. சி.) வாங்கல் - பூரித்தல். இறுதல் - இரேசகம். வீங்கல் - கும்பித்தல். உதம்பண்ணல் - உய்யும் வழி அறிதல்.

(18)

823. உதமறிந் தங்கே ஒருசுழிப் பட்டாற்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்கடிந் தாளே.

(ப. இ.) உய்யும் வழியறிந்து அவ்விடத்து ஒப்பில்லாத சிவமும் சிவையும் ஒருங்கியைந்து விளங்கும்சுழி தோன்றின், அதன் வழியாக மண்டை கருமையாகும். திருவருளம்மையாகிய சிவசத்தி செவ்வியறிந்து எக் காலத்தும் திகழ்ந்து விளங்குவள். அத் திருவருள் மென்னிலையறிந்து நிலைக்களங்களாகிய ஆதாரங்களைக் கடந்து ஆண்டருள்வள். சுழி - பிரமக்கிரந்தி. இதம் - செவ்வி. கபாலம் - மண்டை.

(அ. சி.) கதம் - மார்க்கம். பதம் - பக்குவம். பார் - ஆதாரங்கள்.

(19)

824. பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே.1

(ப. இ.) ஐம்பூதங்களுள் பூவினுக்கு வேண்டப்படும் நிலமும் நீருமில்லை. ஆனால் இவைகளுக்கு அப்பால் ஒரு தாமரையுண்டு. அது தான் திருவருள் தோற்றமாகிய ஆயிரஇதழ்த் தாமரை என்ப. அத் தாமரைக்கு அரும்பும் இல்லை. வேரும் இல்லை. ஆனால் அத் தாமரை மலர்ந்துள்ளது. அங்கு ஓர் ஊருமில்லை. கீழாகிய ஆதியும் மேலாகிய அந்தமும் இல்லாத கேள்வியென்று சொல்லப்படும் மெய்யுணர்வாகிய பூவாகும் அது. அப்பூவின்கண் ஒப்பில்லாத சிவஒளி ஒன்றுண்டு.

(அ. சி.) பங்கயம் - சகசிர அறை. தார் - அரும்பு. கேள்வி - ஞானம்.

(20)


1. சிந்தை அப்பர், 5. 48 - 5.