(ப. இ.) சிவபெருமானை அடைதற்குரிய நன்னெறி மாதவம் இருக்கின்றபோது, புன்னெறிக்கண் செல்லும் கொடிய வினையின் பற்றறுத்துச் செல்லாமல் அப் புன்னெறியின் வழியே செல்லும் கொடு வினையார் சார்பைவிட்டகன்ற நன்னெறிக்கண் சென்றால் தேவதேவனாய் மூவர்கோனாய் விளங்கும் முழுமுதற் றலைவனாம் சிவபெருமான் அப்பொழுதே முன்னின்ருள்வன். (அ. சி.) பழி செல்லும் - நிந்தனை பரவுகின்ற. ஆங்கேவழி - அந்த நிந்தனை பரவும் வழியான பிற மார்க்கம். வழி செல்லில் - சன் மார்க்கத்தில் சென்றால். (23)
19. நிராசாரம் (அல்லொழுக்கம்) 1525. இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு சமயங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங் கமையறிந் தாருட் கலந்துநின் றானே.1 (ப. இ.) இமையமலைபோன்று அசைவற நின்ற தேவர்கள் அவர்கள் நிலைமைக்கேற்றவாறு ஆறு சமயங்கள் பெற்றனர். அவற்றிற்குரிய சாத்திரங்களாகிய பொருள் நூல்களை ஓதினர். அடைதற்காய் அமைந்த நிலையினை அறிந்தோம் என்பர். ஆதிப்பிரானாகிய சிவபெருமானும் பிழைபொறுக்கும் தன்மையராய்ப் பொறுமையுடன் ஒழுகுவாருடன் கலந்து நின்றருள்வன் : (அ. சி.) இமையங்கள் - இமயமலைபோன்று அசைவற நின்ற. அமை - அடையத்தக்கது. கமை - பொறுமை. (1) 1526. பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர் நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர் ஏங்கி உலகில் இருந்தழு வாரே2 (ப. இ.) தாரும்கண்ணியும் ஆக முறையே மார்பினிடத்தும் தலையினிடத்தும் கொன்றைப்பூவால் அமைந்தவற்றைச் சூடி விளங்கும் திருச்சடையினையுடைய சிவபெருமான் திருவடியிணையினை மறவாது உளங்கொண்டு தாங்கும் மெய்யடியார்கள் இந் நிலவுலகத்தில் தமக்குத் தாமே ஒப்பாக விளங்குவர். சிவபெருமானை நினையாது செந்நெறியினை நீக்கித்தாம் புன்னெறியிற் செல்லும் புரையாகிய குற்றத்தினை எண்ணாதவர் செய்வது இன்னதென்றறியாது இவ் வுலகத்தில் ஏங்கி இருந்து அழுவர். (அ. சி.) நேரொப்பர் - சமானம் ஆவார். நீங்கிய - அஞ்ஞானம் நீங்கிய. (2)
1. போற்றுந். அப்பர். 4. 100 - 7. " அல்லும். " 6. 78 - 5. 2. பெருமையால். 12, தடுத்தாட், 196.
|