(ப. இ.) சிவபெருமானை முழுமுதலாகக்கொண்டு செய்யும் முழுமுதல் வேள்வியே திருமுறை வேள்வியாகும். அவ் வேள்வி புரிவாராகிய சிவ அந்தணரின் பேரன்பினையே சிவன் ஏற்றுக்கொள்கின்றனன். அவனே விரிசடை நந்தியாகும். எல்லாப் பொருளும் அவன் உடைமை, எல்லாவுயிரும் அவன் அடிமை. அவ்வாறு இருப்பதால் நமக்கென உரிமையுடையது ஒருசிறிதும் இன்று. ஆதலால் புகை ஒளி காட்டுதல்கள்கூட நம்முரிமை அல்ல. ஆயினும் முழுமுதற் சிவத்தின் உள்ளம் குளிர் விக்கும்படியாக ஊட்டும் அவி செந்தமிழ்த் திருப்பாட்டுகளாகும். ஆகவே அதனையே காட்டுவோமாக. அவ்வவியே பாலவியாகும். சிவத்தின் உள்ளம் குளிர்விப்பதென்பது ஆருயிரின் உள்ளங் குளிர்விப்பதேயாகும். இவ் வுண்மை "நல்லிசைஞானசம் பந்தனும்நாவுக் கரையரும்பாடிய நற்றமிழ் மாலை, சொல்லியவே சொல்லி ஏத்துகப் பானை" என நம்பியாரூரர் ஓதியருளிய செந்தமிழ்ச் சிறப்புத் திருமறையால் உணரலாம். விழுமிய முழுமுதற் சிவத்தினைத் தொழுவோர், வழிவழிக் கொலைபுலை ஒழித்த வாய்மையர். பால் - சிறப்பு. (அ. சி.) வேட்டு அவி உண்ணும் - அந்தணர்கள் செய்யும் நெய் வேள்வியின் அவிசு உண்ணும் (ஆரியர் செய்யும் உயிர்க்கொலை வேள்வி அல்ல). இதனையே நம் திருஞானசம்பந்தர் "பறப்பைப் படுத்து எங்கும் பசுவேட்டு எரியோம்பும்" என்று கூறினார். பசு என்பது ஈண்டு நெய்க்கு ஆகுபெயர். நெய்யைப் பறப்பை (சிருக்கு - சிருவம்) யில் விட்டு எங்கும் வேள்வி செய்யும் என்று பொருள் காட்டவும். நாம் இலம் - வேள்வி செய்து காட்ட நம்மால் முடியாது (போனால்). பாட்டவி - தோத்திரப் பாடலான அவிசாவது. பால் அவி - பால் ஆகிய அவிசாவது. ஆமே - ஆகும். (2) 1794. பான்மொழி பாகன் பராபரன் தானாகும் மான சதாசிவன் தன்னையா வாகித்து மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு சீன்முகஞ் செய்யச் சிவனவ 1னாகுமே. (ப. இ.) பால்போலும் தமிழ் மொழி பகரும் திருவருளம்மையை இடப்பாகத்தேயுடைய முழுமுதல்வன் சிவனாவன். பெருமைமிக்க அன்னையும் அத்தனுமாக விளங்குவோன் சதாசிவன். சதாசிவனை அருளோன் என்றும் கூறுவர். அச் சிவக்கொழுந்தினிடத்துச் சிவபெருமானை எழுந்தருளச் செய்வதாகிய ஆவாகனம் செய்க. சதாசிவக் கடவுளிடத்து விளங்கும் ஐம்முகங்களில் மேல்முகம் ஈசானமாகும். அச் சதாசிவனைத் தொழுவோர் அருட்பொலிவினராய் அழகிய முகத்தினராய்த் திகழ்வர். அவ்வழகே ஈண்டுச் சீன்முகம் என்று ஓதப்பெற்றது. சீன்முகம் என்பது சீலமும். அது சீன்முகம் என நிற்கின்றது. சீல்: சீலம் என்பதன் கடைக்குறை. (அ. சி.) ஆவாகித்து - எழுந்தருளச்செய்து. சீன்முகம் - அழகிய முகம். (3)
1. புத்திரமார்க்க. சிவஞானசித்தியார், 8. 2 - 10. " சிவனெனும். அப்பர், 4. 113 - 9.
|