845
 

(ப. இ.) பருவுடல் நுண்ணுடல் கூறுகளைக் கூறுங்கால் அறிதற் கருவியாகிய ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் ஐம்புலன்களையும் ஏற்றுக்கொள்ளும் செவி, மெய், கண், நாக்கு, மூக்கு என்னும் பொறிகள் ஐந்தும்; செய்தற்கருவியாகிய பேசல், நடத்தல், கொடுத்தல், கழித்தல், (களித்தல்) இன்புறல் என்னும் புலன்களை நிகழ்த்தும் நாக்கு, கால், கை, எருவாய், கருவாய் ஐந்தும் ஆகிய இந்திரியம் பத்தும்; அவற்றால் கொள்ளப்படும் ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ஐந்தும்; பேசல், நடத்தல், கொடுத்தல், கழித்தல், இன்புறல் ஐந்தும் மாத்திரையாகும். அறிவு வளியாகிய உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று ஆகிய வளி ஐந்தும், தொழில் வளியாகிய தும்மற்காற்று, விழிக்காற்று, கொட்டாவிக்காற்று, இமைக்காற்று, வீங்கற்காற்று ஆகிய வளி ஐந்தும்கூடி வளி பத்தாகும். இவ் வளி 'மந்திரமாய் நின்றமாருதம் ஈரைந்து' என ஓதப்பெற்றது அந்தக்கரணமெனினும் அகப் புறக்கலன் எனினும் ஒன்றே. அவை, எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு என நான்காகும் இவற்றைச் சித்தம், மனம், அகங்காரம், புத்தி எனவும் கூறுப. ஆன்மா என்று சொல்லப்படும் ஆன் ஒன்று ஆக முப்பதைந்து என்ப. சக்கரம் - உடல். பிறப்பு சக்கரம்போல் மாறிமாறிச் சுழன்று வருதலால் உடல் சக்கரம் எனப்பட்டது.

(அ. சி.) இந்தியம் ஈரைந்து - கன்மேந்திரியும் ஐந்து; ஞானேந்திரியம் ஐந்து. ஈரைந்து மாத்திரை - வசனாதி ஐந்து; சத்தாதி ஐந்து. மாருதம் ஈரைந்து - வாயுக்கள் பத்து. சக்கரம் - சரீரம்.

(3)

2106. பாரது பொன்மை பசுமை யுடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதங் கறுப்பை யுடையது
வானகந் தூம மறைந்துநின் 1றார்களே.

(ப. இ.) ஐம்பெரும் பூதங்களின் நிறங்கள் வருமாறு: நிலத்தின் வண்ணம் பொன்மை; அது மினுமினுப்பாகிய பசுமையுடையது. நீரின் வண்ணம் வெண்மை. நெருப்பின் வண்ணம் செம்மை. நெருப்பையும் மழையையும் துணைநின்று செலுத்தும் காற்றின் வண்ணம் கறுமை. வானத்தின் வண்ணம் புகைமை. இவ்வைந்தனுள் நிலம், நீர், நெருப்பு மூன்றும் வெளிப்படத் தோன்றுவன. காற்று தொழிலால் புலனாவது வானம் உய்த்துணர்வால் புலனாவது. அதனால் வானத்தை மறைந்து நின்றார் என ஓதினர். மேலும் வானம் ஏனைநான்கு பூதங்களுடனும் விரவி அவற்றிற்கு இடம்கொடுத்து மறைந்துநிற்பது என்றலும் ஒன்று.

(அ. சி.) காரறு - குற்றமற்ற. ஐந்து பூதங்களின் நிறம்:- பார் - பொன்மை. நீர் - பசுமை. தீ - வெண்மை, செம்மை. வாயு - கறுப்பு. ஆகாயம் - புகை.

(4)

2107. பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்
ஏதம் படஞ்செய் திருந்த புறநிலை
ஓது மலங்குண மாகுமா தாரமோ
டாதி யவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.


1. மண்புனல். சிவஞானசித்தியார், 2. 3 - 17.