(ப. இ.) ஆருயிர்கள் பாசப் பிணிப்புண்டு கிடக்கின்ற முறையில் அப் பாசப்பிணிப்பினின்றும் விடுபடக் கைக்கொள்ளவேண்டிய பொருள்கள் மூன்று. அவை இன்பமும் பொருளும் அறனும் என்ப. இம் மூன்றின் வழியொழுகினார் திருவடி எய்தற்குரிய நானெறியில் நடப்பர். அந்நானெறியுள் சீலத்தின் பயனாக நோன்பும், நோன்பின் பயனாகச் செறிவும் கைகூடும். இம் மூன்றன் வழி முடிந்த பயனாகிய அறிவு கைவரும். அவ்வறிவாகிய திருவடியுணர்வை நாடொறும் நோக்கல் நோக்கமாகக் கருதி ஒழுகிவருதல் வேண்டும். அப்படி யொழுகி வந்தால் தொடக்காகிய பாசப்பிணிப்பு ஒன்றும் இன்றாகும். அதன் பொருட்டு முழுமுதற் சிவபெருமானைச் செந்தமிழ்த் திருமுறை ஓதி இடையறாது தொழுங்கள். தொழுதால் குடத்துள் மறைந்திருந்த விளக்க குன்றின் விளக்காகச் சிறந்து உறைந்திருக்கக் காணலாம். குடவிளக்கென்பது ஆருயிர் பாசப்பிணிப்புண்டு மறைந்திருப்பதை யுணர்த்துவதாகும். அவ்வுயிர் பாசப்பிணிப்பு விண்டு சிவபெருமான் திருவடியினைத் திருவருளால் கண்டு சிறந்து உறைந்திருப்பதைக் குன்றின் விளக்கு உணர்த்துவதாகும். (அ. சி.) கிளீர்பயன் மூன்று - அறம், பொருள், இன்பம். 'நான்கு' என்ற பாடமும் உண்டு. அப்பொழுது வீடு ஒன்றைச் சேர்த்த நான்கு ஆகும். நடக்கின்ற ஞானம் - சரியையாதியின் பலனாக நிகழும் ஞானம். தொடக்கு - ஆசாபாசங்கள். குடக்குன்றில் இட்ட விளக்கு - குடவிளக்கு. குன்றில் இட்ட விளக்கு எனப் பிரிக்க. குடத்தில் இட்ட விளக்காயிருந்த ஆன்மா குன்றில் இட்ட விளக்காய் மிளிரும். (3) 2369. பாசஞ்செய் தானைப் படர்சடை நந்தியை நேசஞ்செய் தாங்கே நினைப்பர் நினைத்தலுங் கூசஞ்செய் துன்னிக் குறிக்கொள்வ தெவ்வண்ணம் வாசஞ்செய் பாசத்துள் வைக்கின்ற வாறே.1 (ப. இ.) குற்ற இயல்பாக ஒட்டியுள்ள ஆணவ மலத்தை யகற்றுதற் பொருட்டுக் கன்மம் மாயைகளாகிய பாசங்களைக் கூட்டியருளிப் பிறப்பித்த சிவபெருமானை, மாலையில் தாங்குருப் போன்று விளங்கும் படர்சடை நந்தியை இடையறா உள்ளன்பு பூண்டு தொழுங்கள். தொழுது நினைப்பவர் நினைத்தலும் பேரருட் பெரும் பொருளாகிய சிவபெருமான் நினைப்பதற்கும் குறிக்கொள்வதற்கும் கூசுவதெவ்வண்ணம்? மேலும் பாசத்துள் நிலை பெறுத்துவதெவ்வண்ணம்? செய்யாரென்க. மருத்துவன் நோயாளியைக் கண்டு கூசமுடியாதவாறும், நோய் நீங்கியபின் மேலும் அவனை நோய் மனையில் நிலைபெறச் செய்ய முடியாதவாறும் இதற்கு ஒப்பாகும். மேலும் கற்பிப்போன் கற்கவரும் மாணவனைக் கல்லாதவனென்று கூசமுடியாதவாறும் கற்றுத் தேறியபின் அவனை நிலைநிறுத்த முடியாதவாறும் ஒப்பாகும். எவ்வண்ணம் என்பது இடைநிலை விளக்காய் நின்று வைக்கின்றவாறு எவ்வண்ணம் என்று இயைக்க. எவ்வண்ணம்: வினாவினைக் குறிப்பு; எதிர்மறைப் பொருள் தந்தது. (அ. சி.) பாசஞ் செய்தானை - ஆன்மாக்களின் ஆணவமலம் நீங்குதற் பொருட்டு மாயா மலத்தைக் கூட்டி, உடல், கருவி, உலக இன்பங்களைக் கொடுத்தானை. கூசம் - கூசி. வாசம் செய் - நிலைபெற்ற. (4)
1. பாசம். 8. திருவெம்பாவை, 2.
|