968
 

உலகுடல்கலன்களில் விருப்பம் மீதூர இருவினை புரியும்படி ஆழ்த்தும். அதன்வாயிலாக ஆருயிர்கள் இருவினைகளைப் புரியும். அவற்றின்பயன்களாகிய இன்ப துன்பங்களை நுகர்விப்பதன்பொருட்டு அவ்வுயிர்களை முறையே துறக்கநிரயங்களிலிட்டு ஆழச் செய்யும். இவ் வகையாகப் பயன்துய்க்கும் காலங்கழியப் பிறப்பிற்கு ஏதுவாகிய நான் என்னும் முனைப்புத் தங்கும்படி நற்பாசமாகிய மறைப்பாற்றல் வந்து பொருந்தும் என்க. மறைப்பாற்றல் - நடப்பாற்றல்; திரோதானசக்தி.

(16)

2382. நண்ணிய பாசத்தில் நானெனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டற் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ணல் அடிசேர் உபாயம தாகுமே.

(ப. இ.) மாயாகாரியவுடம்புடன் கூடி நான் என்று முனைத்து நிற்றல் ஆணவப் பண்பாகும். அவ் வாணவம் நீங்குதற்பொருட்டு மாயையின்கண் செலுத்தி இருவினைப்பயன்களையும் நடப்பாற்றல் ஊட்டுவதாகும். ஊட்டுவதனால் ஆணவமலம் அகலும் அகலவே கருதப்படும் அறிவிக்க அறியும் தன்மைவாய்ந்த சேதனனாகிய ஆருயிர்கள்மாட்டு வைத்தபேரருளினால் அவ்வுயிர்க்கு அண்ணலாகிய சிவபெருமானின் திருவடிசேரும் வழிவகைகளையும் அவ்வாற்றல் தோற்றுவித்தருளும். இதனையே உபாயமதாகும் என்றனர். ஆணவம்: வழக்குச் சொல்; ஆண்மை.

(அ. சி.) ஊட்டல் - ஊட்டலால். பரிந்தனன் - நீங்கினான்.

(17)

2383. ஆகும் உபாயமே யன்றி யழுக்கற்று
மோக மறச்சுத்த னாதற்கு மூலமே
ஆகு மறுவை யழுக்கேற்றி யேற்றல்போல்
ஆகுவ தெல்லாம் அருட்பாச 1மாகுமே.

(ப. இ.) நடப்பாற்றல் ஆருயிர்க்கிழவற்கு வினைமாயைகளைக் கூட்டல் வழிவகைகள் மட்டுமன்றி ஆணவ அழுக்கு நீங்கித் தூயனாதற் பொருட்டுக் கடும்பற்றாகிய மருள் நீங்குதற்கும் தூயனாதற்கும் இதுவே மூலமாகும். இதற்கு ஒப்பு அழுக்காக்கிய அறுவை என்னும் ஆடையினை மேலும் சாணி உவர் முதலிய அழுக்கினை ஏற்றி அவ்வழுக்கினை அகற்றுவதாகும். இவ்வனைத்தும் அருட்பாசமாகிய நடப்பாற்றலால் நிகழ்வனவேயாகும்.

(அ. சி.) அறுவை - வேட்டி; தறியினின்றும் அறுத்து எடுப்பது அறுவை. ஏற்றி - கலந்து. ஏற்றல்போல் - அடித்துப் போக்குதல் போல்.

(18)

2384. பாசம் பயிலுயிர் தானே பரமுதல்2
பாசம் பயிலுயிர் தானே பசுவென்ப
பாசம் பயிலப் பதிபர மாதலாற்
பாசம் பயிலப் பதிபசு வாகுமே.


1. எழுமுடல். சிவஞானசித்தியார், 2. 3 - 2.

2. ஆவதென். 12. கண்ணப்பர், 97.