2474. கருதலர் மாளக் கருவாயில் நின்ற பொருதலைச் செய்வது புல்லறி வாண்மை மருவலர் செய்கின்ற மாதவம் ஒத்தால் தருவலர் கேட்ட தனியும்ப 1ராமே. (ப. இ.) கருவாயாகிய போர்முனையிற் சென்று கருதலராகிய பகைவர்கள் மாளும்படியாக் போர் செய்து வெல்லுவது சிறந்த அறிவாண்மையன்று. அது புல்லறிவாண்மையேயாகும். திருவருள் நினைவால் அடக்கத்தை மருவிய ஆண்மையர் மருவலர் எனப்பட்டார். அவர் செய்கின்ற சிவத்தைப் பேணுதலாகிய நற்றவம் ஒத்துக் கைகூடினால் கருதியது கைகூடும். அவர்கள் கேட்டதளிக்கும் தருவலர்களாவர். தருவலர் என்பார், கற்பகதருப்போல் வேண்டியதை மறாதுகொடுக்கும் வள்ளலராவர் என்பதாம். ஒப்புயர்வற்ற சிவ வுலகமாகிய தனியும்பரும் கைகூடும். (அ. சி.) கருதலர் - பகைவர். கருவாய் - போர்க்களம். மருவலர் - அடங்கினவர். தருவலர் - கொடுக்கும் வள்ளல்கள். (3) 2475. பிணங்கவும் வேண்டாம் பெருநில முற்றும் இணங்கியெம் மீசனே யீசனென் றுன்னிற் கணம்பதி னெட்டுங் கழலடி காண வணங்கெழு நாடியங் கன்புற 2லாமே. (ப. இ.) உய்தி தரும் முழுமுதல் தெய்வம் சிவபெருமான் என்பதில் மாறுபடுதல்வேண்டா. பெருநிலமுற்றுக்கும் அவனே ஒப்புயர்வில்லா ஒருபெருங் கடவுள். அவன் திருவடிக்கண் பேரன்பு பூண்டு எம்முதல்வன் இவனே என்று எண்ணுங்கள். இவனே அனைத்துலகினுக்கும் அனைத்துயிர்கட்கும் முழுமுதல்வன் என்று தினைத்தனை ஐயமும் இன்றி மனத்துக்கொள்ளுங்கள். அங்ஙனம் கொள்ளுங்கால் பதினெண்கணத்தவரும் பிறரும் நும்மை வணங்கியெழுந்து மனத்து நினைந்தன பெறலாம் என்று வருவர். இது 'வணக்குறீர் அரனை யொருக்கால் என்றும் வானவர் வணங்கவைப்பன்' எனவும் 'தொழப்படும் தேவர் தம்மால் தொழுவிக்குந் தம் தொண்டரையே' எனவும் அருளிப்போந்த செந்தமிழ்மறையால் உணரலாம்.எனவே சிவபெருமான் திருவடிக்கீழ் அன்புறுதல் தவமாகும். (அ. சி.) பிணங்கவும் - வெகுளவும். பெருநிலம் - ஆஞ்ஞை. வணங்கெழுநாடி - வணங்க விரும்பி வருதலை உணர்ந்து. (4)
1. ஒன்னார்த். வேண்டிய. திருக்குறள், 264 - 5. " நில்லாத. " 331. " இரும்புமுகம். புறநானூறு, 309. " படைக்கல. அப்பர், 4. 81 - 8. 2. எல்லா. 12. சாக்கியர், 7. " பிணத்தினை. சிவஞானசித்தியார், 2. 4 - 24. " முழுத்தழல். அப்பர், 4. 113 - 5.
|