(ப. இ.) விதை (பீசம்) வாயிலாம் உடனுறைவு (புணர்ச்சி) குறையில் உயிர்ப்புமிகும். அதனால் உடம்புக்கு அழிவில்லை. உணவு அளவிற் சிறிது குறைத்துண்ணின் உயிர்ப்பு மிகுதியாகத் தங்கும். அதனால் சிவ இன்பம் மிகும். பொதுவாக மக்கட்கு உள்ளே போகும் உயிர்ப்பு பத்து விரல். வெளியே போகும் உயிர்ப்பு பன்னிரண்டு விரல். இம் முறை, முறையே நடக்கும்போது இருபத்துநான்கு விரல், ஓடும் போது நாற்பத்திரண்டு விரல், உண்ணும்போது பதினெட்டு விரல், உறங்கும்போது ஐம்பது விரல், உடனுறைவின்போது அறுபது விரல், உயிர்ப்பு வெளிச்செல்லும். விரல் - அங்குலம். (அ. சி.) அண்டம் - பீசம். பிண்டம் - தேகம். (12) 716. பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில் வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார் கண்டிச் சிக்குநற் காயமு மாமே. (ப. இ.) மூலத்திடத்துள்ள குண்டலியாற்றலை எழுப்பி நடுநாடி வழியாக அடுத்தடுத்துச் செலுத்தினால் உடம்பு பொன்னியலும் மேனியாகும். அம் மேனியினைப்போல் தம் மேனியும் ஆகவேண்டும் என்னும் எண்ணம் வண்டுகள் விரும்பும் மலர்மாலையைக் சூடிய கூந்தலையுடைய பெண்களுக்குக் கண்டதும் உண்டாகும். பிழக்கடை - புழக்கடை. (அ. சி.) பிழக்கடை - குதம், குய்யம் இரண்டிற்கும் இடையிலுள்ள வாயில். அண்டத்துள் உற்று - அண்டத்து உள்ளிருந்து வெளிப்படும் வெள்ளியை வீணாத்தண்டுள் விட்டு. (13) 717. சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி சுழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன் கழல்கொள் திருவடி காண்குறில்ஆங்கே நிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே. (ப. இ.) யாவரும் மனமருளும்படி தொன்றுதொட்டே சீற்றத்துடன் வரும் கூற்றுவனைத் தன்னையடைந்தார் பொருட்டுச் சிவபெருமான் சீறியருளுவன். அச் சிவன் நெற்றிநடுவிற் காணப்படும் முக்கோணமாயுள்ள தீயினுள் விளங்குவன். முக்கோணம் தேர்போல் காணப்படுதலால் இரதம் என்று குறிக்கப்பட்டது. கழல்...மாமே - சிவபெருமான் திருவடித்துணைகொண்டு நோக்கினால் அங்கு நிழல்செய்கின்ற அழகிய மண்டபத்துள் என்றும் சிவன் விளங்குவன். (14) 718. நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந் தான்கண்ட 1வாயுவும் சரீர முழுதொடும் ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக மான்கன்று நின்று வளர்கின்ற வாறே.
(பாடம்) 1. வாயுச் சரீர.
|