327
 

767. அறிவது வாயுவொ டைந்தறி வாய
அறிவா வதுதான் உலகுயி ரத்தின்
பிரிவுசெ யாவகை பேணியுள் நாடிற்
செறிவது நின்று திகழு மதுவே.

(ப. இ.) காற்றெலாம் ஒடுங்கி அவற்றுடன் ஏனைய நான்கு பூதமுங்கூட ஐந்தனையும் அருளால் உணர்தல்வேண்டும். வேரறநிற்கும் சிவபெருமானை அகத்தே பேணிநாடுதல் வேண்டும். அப்பொழுது அச்சிவன் செறிந்து விளங்குவன். செறிந்து - நிறைந்து.

(18)

768. அதுவரு ளும்மரு ளான துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளும்
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறையவ னாமே.

(ப. இ.) அகத்திருள் நீங்க வினைக்கீடாக மருளான உலகைப் படைத்தருளும். திருவடியைப் புகழ்வார்க்குப் பொதுநிலை அருளப்படும். தேன்நிறைந்த மலர் சூடிய மங்கையர் செவ்வி வாய்க்கும். இதை யருள்வது இறைவனாகும்.

(19)

769. பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பைப்
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலு மதியே.

(ப. இ.) ஆருயிர்கள் பிறத்தல்வேண்டும் என நந்தி திருவுள்ளக் குறிப்புக் கொண்டருளினன். அக் குறிப்பினால் மாயாகாரியமாகிய குரம்பையை ஒத்த இவ் வுடம்பு ஆருயிர்கட்கு அமைந்தது. இவ் வுடல் தொன்றுதொட்டு வருவது. பாசப்பற்றறுக்கக் கருவியாவதும் இதுவே. பாசங்கள் அழுது விலகும்படி செய்வார்க்கு மெய்யுணர்வு பெருகும்.

(20)


16. வார சரம்

770. வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

(ப. இ.) உயிர்ப்பின் ஓட்டத்தைச் சரமென்பர். அது, வெள்ளி திங்கள் புதன்கிழமைகளில் இடமூக்கின் வழியாகச் செல்லுதல்வேண்டும்.