எல்லாவற்றுக்கும் காரணமாயுள்ளவளும், ஒளிக்குள் ஒளியாய்த் திகழ்பவளும், பேரின்பமருளும் அழகிய முதல்வியும், இனிய அமைதி தருபவளும், மனத்தின்கண் சிவநினைப்பை நிலைபெறச் செய்பவளாகிய மனோன்மனியும், மங்கல குணமுடையவளும் ஆகிய இறைவி திருவைந்தெழுத்தை உயிருக்கு உயிராய்நின்று ஓதுவித்து உடனாக இருந்தருளினள். அகாரணம் - காரணமின்மை. உடனியைதல் - இயைந்து இயக்குவித்தல். (அ. சி.) அகாரணகாரணி - தனக்கோர் காரணம் இல்லாதவள். (40) 1091 .இயைந்தனள் ஏந்திழை என்னுள்ள மேவி நயந்தனள் அங்கே நமசிவ என்னும் அயன்றனை யோரும் பதமது பற்றும் பெயர்ந்தனள் மற்றும் பிதற்றறுத் தாளே. (ப. இ.) முதல்வி என்னுள்ளம் பொருந்தி எளியேன் 'நமசிவ' என்னும் தமிழ்மறையை மேற்கொண்டு ஒழுகும் பரிபாகமாகிய செவ்வியை விழைந்தனள். அதனை ஓதுவித்தனள். அப்பொழுதே நிலையிலாப் பொருள்களின் பற்றுக்களையும் நீக்கியருளினள். மேலும் பிறப்புத் துன்பத்தையும் அறுத்தருளினள். நமசிவ: என்பது முறையே அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு பொருள்களையும் குறிக்கும் மறைமொழிக் குறிப்பாகும். 'நமசிவய' என்றிருப்பின் அறம்பொருள் இன்பம் வீடு பேறு என்னும் ஐந்து பொருள்களையும் குறிக்கும் குறிப்பாகும். அயன்: ஈண்டு மறையினை ஆகுபெயராகக் குறிக்கும் பெயர்ந்தனள்: பிறவினை தன்வினையாக நின்றது. (41) 1092 .பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர் முயற்றியின் முத்தி அருளும் முதல்வி கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய் முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே.1 (ப. இ.) உண்மை அறிவு இல்லாத மாந்தர் பயனிலவாகிய சொற்களைப் பிதற்றி வாழ்நாளை வீழ்நாள் ஆக்கினர். நானெறியில் விடாது முயல்வார்க்கு வீடுபேற்றையருளும் முதல்விக்கு அருள்பொழியும் முக்கண்ணும், முதல் ஒலியாகிய நாதத்துக்கும் ஒலியருளும் செவ்விய திருவாயும், இன்பத் திருவருள் பொழியும் திருமுகமும் இயல்பாகவே தொன்மையாய் உள்ளன. (அ. சி.) முயற்றி - முயற்சி. கம்பலை - ஒலி. (42) 1093 .உள்ளத் திதயத்து நெஞ்சத் தொருமூன்றுள் பிள்ளைத் தடமுள்ளே பேசப் பிறந்தது 2வள்ளற் றிருவின் வயிற்றினுள் மாமாயைக் கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே.
1. அரும்பய. திருக்குறள், 198. 0" தொழுது. அப்பர், 5. 21 - 8. 2. (பாடம்) வள்ளத் திருவினை.
|