தியக்கும் பொற்பினளாவள். அவளே தொன்மையளுமாவள். நில எல்லையாகக் கூறப்படும் பத்துப்புலங்களையும் உடையவளும் அவளே. புலம் - திசை. (25) 1156. பத்து முகமுடை யாள்நம் பராசத்தி வைத்தனள் ஆறங்க நாலுடன் றான்வேதம் ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே நித்தமாய் நின்றாளெம் நேரிழை கூறே. (ப. இ.) சிவபெருமானது கூறாகத் திகழும் திருவருள் அம்மை, புலம் பத்தாதலின் பத்துத் திருமுகங்களையுடையவள். அவள் பேரருள் என்னும் பெயருடைய பராசத்தியாவள். அவளே திருநான்மறையும் கருவியாம் ஆறு உறுப்புக்களும் ஆருயிர் உய்ய ஓதுவித்தனள். அவளே அத்தனாகிய சிவனுக்கு அருள், திருமேனியாதலால் தாங்குவதாகிய ஆதாரம் ஆகின்றனள். ஒடுங்கும்போது அருள் அத்தனுள் ஒடுங்குதலால் தாங்கப்படுவதாகின்றது. இம்முறையாகத் தானதுவாம் தன்மையில் சிவனும் அருளும் என்றும் பிரிப்பின்றிநின்று அருள்செய்வர். (அ. சி.) பத்து முகமுடையாள் - ஆதார ஆதேய சத்தியின் முகங்கள் பத்து. வைத்தனள் - தன் கரத்திடத்துச் சுவடி உருவமாக வைத்துளாள். ஆறங்கம் - தமிழ் அங்க நூல்கள் ஆறு. நாலுடன் தான் வேதம் - தமிழ் மறைகள் நான்கு. (26) 1157. கூறிய கன்னி குலாய புருவத்தள் சீறிய ளாயுல கேழுந் திகழ்ந்தவள் ஆரிய நங்கை யமுத பயோதரி பேருயி ராளி பிறிவறுத் தாளே. (ப. இ.) திருவருளம்மை என்றும் கன்னி என்றும் கூறப்படுவள். அவள் விளங்கும் புருவத்தள். நடப்பாற்றலாக உலகேழிலும் இயைந்தியக்குங்கால் முற்சினம் பொருந்தியவளும் அவளே. வனப்பாற்றலாக ஆருயிர்களுள் செவ்வி வாய்ந்தவற்றை அரனடிக்குச் சேர்த்தலால் நிறைந்த பேரருள் உள்ள நங்கையாகின்றாளும் அவளே. அவள் அனைத்துயிரையும் அருள் காரணமாகக் காக்கின்றனள். அவள் ஆருயிரினின்றும் பிரிய வேண்டிய மலமாயை கன்மங்களைப் பிரிவித்தனள். ஆரிய - நிறைந்த பிறிவறுத்தாள்: பிறிவு - பிரிய வேண்டிய மலமாயை கன்மங்கள். (அ. சி.) ஆரிய நங்கை - மகிமை பொருந்திய மங்கை. பயோதரம் - பால் நிறைந்த முலைத்தடம். பேர் உயிராளி-எண்ணிறந்த உயிர் வருக்கங்களை ஆட்டுவிப்பவள். (27) 1158. பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை குறியொன்றி நின்றிடுங் கோமளக் கொம்பு பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே அறிவொன்ற நின்றனள் ஆருயி ருள்ளே.1
1. விளம்பிய. சிவஞானபோதம், 5.
|