1466. பிணங்கிநிற் கின்றவை யைந்தையும் பின்னை அணங்கி யெறிவ னயிர்மன வாளாற் கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன் வணங்கவல் லான்சிந்தை வந்துநின் றானே.1 (ப. இ.) ஆருயிர்கட்கு உடலாய் அவற்றுடன் மாறுபட்டு நிற்கின்ற இருபத்தைந்து மெய்களையும் அவ்வுயிர் அகத்தவத்தால் எய்தும் கூரிய ஞான வாளால் வருத்தி எறியும். பதினெண் குழுவினரும் கைகூப்பி வணங்கித்தொழும் சீரும் சிறப்பும் வாய்ந்த ஒப்பில் சிவபெருமானை வணங்கவல்லவர் உள்ளத்தின்கண் அவன் வெளிப்பட வந்தருள்வன். கணம் பதினெட்டு : 'அமரர் சித்த ரசுரர் தைத்தியர், கருடர் கின்னரர், நிருதர் கிம்புருடர், காந்தருவ ரியக்கர் விஞ்சையர் பூதர், பசாசர் அந்தரர் முனிவருரகர் ஆகாய வாசியர் போகபூ மியரெனப், பாகு பட்டன பதினெண் கணமே.' (பிங்கலந்தை, 92.) இருபத்தைந்து மெய்களும் மாறுபட்டு நிற்கும் உண்மையினை நம் மெய்கண்டார் குறிப்பிற் புலப்படுத்துவார் 'அன்றும் புலனாய அஞ்செழுத்தை' என்றருளினர். இது போன்று மெய்கண்டார் செந்தமிழ்ச் சிவஞானபோதத்தின்கண் காணப்படும் ஒற்றுமைகள் பல. அவை அங்கங்கே வரும் அடிக்குறிப்பிற் காண்க. (அ. சி.) அணங்கு - வருத்தி. (6) 1467. வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும் வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும் உளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப் பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே. (ப. இ.) வளம் கனி என்பது வளம் கன்னி என்பதன் இடைக் குறை. வளந்தரும் கன்னியாகிய திருமகள் மனமொப்பி மார்பில் வீற்றிருக்கும் திருமால் வளமிக்க களங்கனியொத்த நிறமுடையவராவர். அத் திருமாலுக்கும் முதன்மை வாய்ந்த மெய்ப்பொருளாயுள்ளவன் சிவன். சிவபெருமான் வழிபாட்டினால் உள்ளங் கனிந்து உயர்ந்திருப்பர் மெய்யடியார். திருவடிப் பேரின்பப் பழங்கனிய அம் மெய்யடியார்க்கு அதனைப் பகிர்ந்துகொடுத்து உடனின்றருள்வன் அச் சிவன். (அ. சி.) வாய்மையன் - தன்மையன். (7)
1. ஞானவாள். 8. திருப்படை எழுச்சி, 1. " ஒன்றறிந்த. சிவஞானபோதம், 3. 3 - 1.
|