6
 

(ப. இ.)வேறிடத்தும் பக்கத்தும் யாவற்றிற்கும் காரணமாம் சிவ பெருமானை அவனருளால் ஆராயின் அவனுடன் ஒத்து விளங்கும் பெரிய முழுமுதல் தெய்வம் யாதொன்றும் இல்லை. அவன் திருவடியுணர்வு கொண்டு சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நன்னெறி நான்மையால் அடைய முயலும் முயற்சிக்கண் அவன் துணைபுரிந்து வெளிப்பட்டருள்வன்; முடிவிலும் அங்ஙனே திகழ்ந்தருள்வன்; அதனால் அவன் வேண்டுங்காலத்துப் பொய்யாது பெய்யும் அருண்மழை முகில் போல்வன். அவன் திருப்பேர் நந்தி என்ப.

(அ. சி.)பெயலு மழைமுகில் - மழை பெய்யும் முகில், அருண் மழையைப் பொழிகின்ற மேகம் போன்றவன். முயலின் முடியும் - அச்சாதனையின் பயனும் முயலும் - முத்தி சாதனையும். அயலும் புடையும் - புறத்தும் அகத்தும்.

(9)

10. பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்
முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனு மாமே.

(ப. இ.)எந்நாளும் அவனருள் துணையால் நிகழும் பேரன்பால் நந்தியங் கடவுளைச் 'சிவ சிவ' என்று; இடையறாது ஏத்துகின்றேன்; இரவும் பகலும் நெஞ்சத்து அவனையே இடையறாது நினைதலாகிய பரவுதலைச் செய்கின்றேன்; அவன் திருவடியைப் பெறவே முயல்கின்றேன்; அவன் என்றும் அழியா அறிவொளியாய் எவற்றையும் ஒளிர்விக்கும் ஆற்றலொளியாய்த் திகழும் ஓங்கொளிவண்ணன்; எம் தலைவன்; இயல்பாக விளங்கும் உண்மையறிவின்பப் பேரொளி வண்ணன்; குறைவிலா நிறைவாய்க் கோதிலா அமிழ்தாய்த் திகழும் முறையுறும் முதல்வனாவன்.

(அ. சி.)இயற்றிகழ் - இயல்பாகவே பிரகாசிக்கின்ற உயற்றுவன் - உயிர் வாழ்வேன். இயற்றுவன் நெஞ்சத்து - நந்தி தன் திருவடியை நெஞ்சத்துள் பொறிப்பன். பிதற்றுகின்றேன் - ஓயாமல் உச்சரிக்கின்றேன்.

(10)

11. கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன்என் றறியகி லார்களே.

(ப. இ.)நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் அன்பு செய்யும் ஆருயிர்கட்கு அருள்புரிய வேண்டும் என்னும் ஒப்பில்லாத தனிப்பெருங் காதலுடன் என்றும் ஒருபடித்தாய் அழிவின்றி நிற்பன். அவன் அவ்வாறு நிற்கவும் அளவில்லாத தேவர்கள் என அவன் ஆணையால் சிறப்புப் பெற்ற ஆருயிர்கள் மலப்பிணிப்பால் வினைக்கீடாய் மாயாகாரிய உடம்புகளுடன் பிறந்திறந்து வருவதே தொழிலாய் ஒழிந்தனர். அங்ஙனமிருந்தும் மண்ணுலகத்தாரும் விண்ணுலகத்தாரும் என்றும் அழியா இயற்கைசேர் அண்ணல் சிவபெருமானே என்று அறியாது தடுமாறுகின்றனர்.