(ப. இ.) திருவருளால் திருவடியுணர்வால் அடியேன் பெற்ற இறவாப் பேரின்பம் இவ்வையகம் பெற்று இன்புறுமாக. செந்நெறிச் செல்வர்களாகிய நற்றவத்தான் உயர்ந்தோர், இடையறாது பெருங் காதலால் பற்றி நின்ற விழுமிய முழுமுதற் சிவம் மறைப்பொருளாகும். அப்பொருளினை எய்தும் மெய்நெறி சொல்லிடின், ஊனாகிய நெஞ்சத்திடத்து ஓசை அருவாய் நிற்கும். அதன்பின் ஆருயிரின்கண் அவ்வோசை உணர்வுருவாய்த் திகழும். அம் மந்திரம் செந்தமிழ் நான்மறைச் 'சிவசிவ' இந்தத் தனிப்பெருந் தமிழ்மறையினை ஆருயிர் இடையறாது அழுந்த அழுந்தக் கணிக்கக் கணிக்கத் திருவடியில் தலைக்கூடும். ஊன் நெஞ்சம் - ஆகுபெயர். உருவால் வரி அருவாம் ஓசையுணர்வின், உருவால் உயிரின்பாம் ஓர். (அ. சி.) ஊன் பற்றி - தசைபொதி நாவைப் பற்றி. (13) 148. பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச் சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பி1 மறுப்பிலர் நெஞ்சினுள் மந்திர மாலை உறைப்பொடுங் கூடிநின் றோதலு மாமே. (ப. இ.) சிவன் பிறவா யாக்கைப் பெரியோனாதலின் பிறப்பிலி முதல்வன் எனப்படுவன். அவனை நந்தியென்னும் திருப்பெயரான் அழைப்பர். சிவவுலகத்தில் வாழும் வானவராகிய வழிப்பேற்றினர் சிறப்பொடு திருமுறையோதி வழிபடுவர். தம் நெஞ்சினுள் செந்தமிழ்த் திருமுறையாம் இத் திருமந்திரமாலையினைத் திருவடி உறைப்புடன் திருவருளுடன் கூடிநின்று மறவா நினைவுடன். இடையறாது ஓதுதலும் இயல்பாம் என்ப. வழிப்பேறு - பதமுத்தி. ஓதுதல் - பாராயணம் செய்தல். (அ. சி.)உறைப்பு - உறுதி. (14) 149. சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம் மிதாசனி யாதிருந் தேனின்ற காலம் இதாசனி யாதிருந் தேன்மன நீங்கி உதாசனி யாதுட னேஉணர்ந் தேமால். (ப. இ.) அருளோனாகிய சதாசிவக் கடவுள் அருளிச் செய்த என்றும் மாறா மெய்ம்மை மறை முப்பொருள் தேற்றும் தமிழ்மறை. ஒருபுடையாக முத்தமிழினை முறையே உயிர் உள்ளம் உடல் என உலகியலிற் கொள்ளலாம். முத்தமிழ்: இயல் இசை கூத்து. அவற்றையே வீட்டியலிற் கொள்ளுங்கால் இறை உயிர் தளை எனக் கொள்ளுதல் சாலும். இத்துணை நாளும் அளவாயுண்ணும் அமைவுடையவனாக விருந்தேன். முத்தமிழ் வேதத்துக்கு உறைவிடமாக உள்ளத்தினையே அமைத்தேன். அம் மறையினைப் புறக்கணிக்காது திருவருளுடன் கூடியுணர்ந்தோம். மிதாசனி - மித + அசனி: அளவாயுண்போன். இதாசனி - உள்ளத்தை உறைவிடமாக நல்கியோன்.
1. பிறப்போ. அப்பர், 6. 30 - 5.
|