போன்ற புணர்ப்புள்ள புண்ணியன் சிவன். அவன் அடியேன் உள்ளத்து நிலைத்து நின்றருளினன். (அ. சி.) தராபரன் - தரையாகிய உலகங்களுக்கு இறை. சிராபரன் - மேலான தேவன். மராமரன் - மரு + ஆம் + அரன் - பூவின் மணம் போன்ற சிவன். (8) 1731. பிரானல்ல நாமெனிற் பேதை யுலகங்1 குராலென்னு மென்மனங் கோயில்கொள் ஈசன் அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும் பொராநின் றவர்செயப் புண்ணியன் தானே. (ப. இ.) நல்ல முழுமுதல் நாங்களே என்று உலகோரிற் சிலர் கூறுவரானால், அறியாமைக் குழியில் வீழ்ந்து துன்புறுவர். பிணிப் புண்ணப் பட்டமையால் பசுப் பிணிப்பி என்றழைக்கப்படும். அதுவே இங்குக் குரால் என ஓதப்பெற்றது. அத்தகைய என் மனம் கோயிலாகக் கொண்டனன். அரவணிந்த செவ்விய திருச்சடையை உடையவர் திருவடிக்கூட்டமாகிய வீட்டியலில் தீயினையும், கருவடி ஊட்டமாகிய உலகியலில் நீரினையும் போன்று மாறுபடுகின்றவர். அங்ஙனம் மாறுபட நிற்பதும் ஆருயிர்களுக்கு அருள் செய்தற் பொருட்டேயாம். இத்தகைய மாறா அருளுடையோன் சிவன். அவன் புண்ணியன் என்று அழைக்கப்படுவன். (அ. சி.) பிரானல்ல நாமெனில் - நல்ல பிரான் நாம் எனில். குரால் - பசு. பொரா நின்றவர் - பொருகின்றவர்; அஃதாவது தரிக்கின்றவர். செய - கருணை புரிய. (9) 1732. அன்றுநின் றான்கிடந் தானவன் என்று சென்றுநின் றெண்டிசை ஏத்துவர் தேவர்கள் என்றுநின் றேத்துவன் எம்பெரு மான்தனை ஒன்றியென் உள்ளத்தின் உள்ளிருந் தானே. (ப. இ.) தொன்மையிலேயே ஆருயிர் உய்தற்பொருட்டுத் திருவருளால் அவ் வுயிர்கட்குக் கட்புலனாம்படி அங்கங்கே தோன்றி நின்றனன் சிவன். அதுபோல் வீற்றிருந்தருள்பவனும் அவனே. இவ்வாறாக எல்லாப் புலன்களிலும் உறையும் விண்ணவர்கள் பாடிப் பரவிப் பணிந்து தொழுவர். அடியேனும் இறைவனை எந்நாளும் ஏத்துவன். அச் சிவனும் அடியேன் உள்ளத்துள் முத்திறத்தால் கலந்து நின்றருளினன். அதனால் அவன் என்னுள்ளத்து ளிருக்கின்றனன். முத்திறம்; ஒன்றாய், வேறாய், உடனாய். (அ. சி.) அன்று - ஒரு காலத்தில். ஒன்றி - கலந்து. (10)
1. பன்முகச். தாயுமானவர், 13. சிற்சுகோ, 10.
|