908
 

2248. கலப்பறி யார்கடல் சூழல கேழும்
உலப்பறி யாருட லோடுயிர் தன்னை
அலப்பறிந் திங்கர சாளகி லாதார்
குறிப்பது கோல மடலது வாமே.

(ப. இ.) ஏழுவகையான உலகங்களும் பிறப்புக்களும் மாயாகாரியப் பொருள்களின் கலப்பென்றும், அவற்றுடன் ஆருயிர் கலந்திருப்பதும். நிலைப்பாடுடைய தன்றென்றும் ஆன்றோர் கொள்ளும் உண்மையினை அறியார் கலப்பறியாராவர் உயிருடன்கூடிய உடல் அழியும் என்பதையும் அத்தகைய அழிவுபாட்டுக்குரியவுடல் உயிரினைத் தன்வழியீர்த்து அலைப்பதனையும் அறியார். அருளால் அறிவரேல் அவ்வுடலினை ஆளும் தகுதியினை உடையவராவர். அத் தகுதியினை அறிந்து அவற்றை ஆளும் வலியில்லாதாரும் உண்மை உணரவும் வலிபெறவும் சிவபெருமானை ஒருங்கிய வுள்ளத்துக் குறித்தல்வேண்டும். அதற்குத் துணைபுரியும் கடவுள் திருக்கோலங்களை மேற்கொள்ளுதல்வேண்டும். அங்ஙனங் கொண்டால் அவற்றிற்கு வேண்டும் வலிமை முற்றும் அருளால் தாமே வந்துறும். குறித்தல் - தியானித்தல்.

(அ. சி.) உலப்பு - அழிதல். அலப்பு - அலைத்தல். குறிப்பது கோலம் - ஈசன் உருவத்தை நினைப்பது. அடல் - வலிமை.

(19)

2249. பின்னை யறியும் பெருந்தவத் துண்மைசெய்
தன்னை யறியில் தயாபரன் எம்மிறை
முன்னை யறிவு முடிகின்ற காலமும்
என்னை யறியலுற் றின்புற்ற வாறே.

(ப. இ.) பின்னையறிவாகிய செயற்கைக் கல்வியறிவினால் நன்னெறி நான்மை நற்றவத்துண்மை செய்து மேற்கொள்ளின் அன்னையாகிய திருவருளம்மை நம்மை அறிவள் அன்னையறிந்தால் பெருங்கண்ணோட்டப் பெரும்பொருளாகிய எம்மிறைவன் உணர்வன். உணரவே தொன்மை இயற்கை யறிவு சிவபெருமான் திருவடிக்கண் பொருந்தும் நன்னிலைமை வந்து எய்தும். அந்நிலையில் திருவடியுணர்வால் என்னையறியலுறுவேன்; உறவே ஆண்டவன்றன் திருவடி இணையிலா இன்பத்தினையும் எய்துவேன். ஒருவன் தன்னை யறிவதென்பது உள்ளம் உரை உடல் மூன்றாலும் உஞற்றும் எண்ணம் சொல் செயல் என்பவைகளாற்றானறியும் இவ்வறிவு நிலையில் சார்பறிவாகும். துய்ப்பினால் தன்னையறிவது நிலையுடைச் சார்பறிவாகும். அஃது கோலங்கொண்டோன் தன்னை அக் கோல வண்ணத்தனாயே குறிப்பதனையொக்கும். குறிப்பது - கருதுவது.

(20)

2250. பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன்கர ணங்களாம்
தன்னின் மறைந்தது தன்கர 1ணங்களே.


1. சிறைசெய்ய. சிவஞானபோதம், 8. 4 - 1.

" பன்னிறங்க. சிவஞானசித்தியார், 8. 4 - 1.