நூல்களனைத்தும் திருவடிப்பேறாம் பரகதியுண்டென அறுதியிட்டு உறுதியுடன் மொழியும். அங்ஙனமிருப்பவும் சிலர் இல்லை என இயம்புகின்றனர். இன்னும் சிலர் ஒன்றுமட்டும் உண்டு ஏனைய இல்லை என்கின்றனர். பின்னும் சிலர் 'யாங்களே கடவுளென்றிடும் பாதகத்தவ'ராகின்றனர். மற்றும் சிலர் உண்டுபோல் உரைத்து ஈற்றில் இல்லையென்கின்றனர். இவர்கள் அனைவரும் இல்லையென்போர்களேயாவர். இத்தகையார் இம்மையிலும் மறுமையிலும் துன்பமாகிய இருளில் தங்குவர். இதுவே நரககதியாகும். நரககதி என்பது நரகதி எனக் கடைக்குறைந்து நின்றது. நரககதியில் தங்கும் இன்பிலாத் துன்பினராம் இவர்கள் தன்மையினை நானிலம் அறியும் மேலும் சோற்றாவியற்றுக் கடைதொறும் கைகூப்பி ஏற்றாலும் பிச்சை கிடையாது. ஏக்கற்றிருக்கும் இரவலருமாவர். இரக்கும் கதி இரகதி எனநிற்பது செய்யுட்டிரிபு. உண்ணத் தொடங்கி அங்கும் இங்குமாய்க் குதிரையோட்டம் ஓடுவர். துரககதி என்பது துரகதி என நின்றது. (அ. சி.) நரகதி - நரககதி. இரகதி - இரக்கும் தொழில். கடை தோறும் - வாயில்கடோறும். துரகதி உண்ண - ஓட்டமாய்ச் சென்று அலைய (மோட்சநிந்தை செய்பவர் இரந்து வாழ்வார் என்றது). (1) 2518. புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில் திறப்பட்ட சிந்தையைத் தெய்வமென் றெண்ணி அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன் இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் 1றானே. (ப. இ.) அகத்தே நின்று புறப்பட்டுப் போவதும் வருவதுமாகிய உயிர்ப்பினையும் நாட்டத்தினையும் திருவருளால் முறைப்படுத்தி ஒருமுகப்பட்ட எண்ணத்தால் முழுமுதற் சிவபெருமானை இறையாகிய பதி என்று எண்ணினேன். பற்றற்றவிடத்துப் பற்றுற்றுநிற்கும் சிவபெருமானைப் பதி என்று அழைத்தேன். சிற்றுணர்வும் சுட்டுணர்வுமாகிய யான் எனதென்னும் செருக்கு இற்றகலச் சிவபெருமான் திருவடியினைப் பற்றினேன். அவனும் இங்குற்றேன்; இஃதென்னென்று அருளுகின்றனன். (அ. சி.) புறப்பட்டுப்போகும் - பன்னிரண்டங்குல அளவுள்ள பிராணவாயுவில் பிரிந்துபோகும் நாலங்குல அளவுள்ள பிராணவாயுவும். புகுதும் - கூடிக்கொள்ளும். அறப்பட்ட - அற்ற இடத்தில் உறுவதான. இற - சீவபோதம் நீங்க. (2) 2519. திடரிடை நில்லாத நீர்போல ஆங்கே உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக் கடலிடை நில்லாக் கலஞ்சேரு மாபோல் அடலெரி வண்ணனும் அங்குநின் 2றானே.
1. அங்கத்தை. அப்பர், 4. 75 - 8. " எங்கேனும்மிருந். ஆரூரர், 7. 23 - 2. 2. துன்பக். அப்பர், 4. 92 - 6. " பிறவிப். திருக்குறள், 10.
|