இல்வாழ்க்கையாகிய நற்றவப் பயனாகும். அதற்கென அமைக்கப்பட்டதே விந்துவாகிய வித்து. அவ் விந்து கோழை எனப்படும். அவ்விந்துவை முறை கடந்த பெண்பால் தீ யொழுக்கமாகிய மாசு மூடிக் கிடக்கும் குளமாகிய கருக்குழியில் ஒழுக்கி நட்டு வாழ ஆராய்வார்களை நல்லோர் தடுத்து ஒறுத்து வழி நிறுத்துதல் வேண்டும். அங்ஙனம் தடுக்காவிட்டால் அத் தீயோர் பாவப்புகும்வழி நுழைந்து தமக்கும் பிறர்க்கும் வரவேண்டிய நற்பயனை இழப்பித்து மாள்வர். பாசி - மாசு. அளப்புறுவார் - ஆராய்வார். தாழ - தடைப்பட. பூழை - புகும்வழி. (அ. சி.) கோழை - விந்து. குளம் - கருப்பை. (5)
10. நல்குரவு 252. புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப்பட் டார்களும் அன்பில ரானார் கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே.1 (ப. இ.) 'உழப்பின் வாரா உறுதிகள் உளவோ' என்பதை நாடாது, 'கழப்பின் வாராக் கையறவுளவோ' என்பதற்குக் காட்டாக உழையாது வைத்து நல்குரவு எய்துவோர் வாழ்க்கை, முற்றுங்கிழிந்து அற்றம் மறைத்தற்கும் ஆகாப்புடைவை போல் மதிப்புறாது போய்க்கழியும். கழியவே தம்மைச் சார்ந்த நண்பர் உறவினர் முதலாயினாரும் அன்பற்று விலகுவர். எவர்க்கும் ஏதும் கொடுத்தலும் உண்டாகாது. அதனால் அவர்கள்பால் ஏதும் கொள்ளுதற்கும் இடன் இன்று. சிறப்பாகக் கொண்ட உயிர் நட்பும் பறந்தொழிந்தது. ஆனேறுபோல் தான் நிமிர்ந்து நடக்கும் பீடுநடையில்லை. நாட்டில் என்புதோல் போர்த்த உடம்புபோல் இன்பின்றித் திரிகின்றார்கள். கோள் - கொடுக்கல் வாங்கல். (1) 253. பொய்க்குழி தூர்ப்பான்2 புலரி புலருதென்று அக்குழி தூர்க்கும் அரும்பண்டம் தேடுவீர் எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின் அக்குழி தூரும் அழுக்கற்ற போதே. (ப. இ.) ஐயோ! பொழுது விடிகின்றதே 'இன்றும் வருவது கொல்லோ நெருநலும், கொன்றது போலும் நிரப்பு' என்று நிலையிலாக் குழியாகிய வயிற்றினை நிரப்புதற் பொருட்டு மிக வருந்தி அக் குழி தூர்த்தற்கு வேண்டிய அரும் பொருள்களைத் தேடுவீர்! பசிக்குழி, நோய்க்குழி, வறுமைக்குழி, பிறவிக்குழியாகிய எக்குழி தூர்க்க வேண்டுமானாலும் எல்லாம் வல்ல இறைவனை முறையாகச் செந்தமிழ்ச் சொல்
1. நல்குர. திருக்குறள், 1045. 2. வாழ்ந்தன. 11. பட்டினத்துப் பிள்ளையார், திருவிடை மும்மணி - 7.
|