மேலெழுந்து விளங்கும் சிற்றின்பம் பேரின்பமாகிய இரண்டனையும் முறையான் அருளவல்ல திருக்கண்களையுடைய அம்மையாருடன் இசைந்தனன். அன்பு செய்வாரை ஏற்றருளவே அங்ஙனம் இசைந்தனன். துன்பத்தை மிகுவிக்கும் புட்சிமிழ்க்கும் கண்ணி போன்ற ஐம்புலன் ஆட்டும் ஆட்டத்தின்படி ஆடும் பிணிப்பினை அறுத்து, சிவபெருமான் மாட்டு நட்புக் கொள்ளும் பயன் நிறைந்தவுள்ளத்தை நீங்கள் நாடுங்கள். இன்புறுகண் சிற்றின்பம் பேரின்பங்களை அருளுகின்ற கண்களையுடைய இறைவி. (அ. சி.) கண்ணி ஐந்து - ஐம்புலன். (3) 270. புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு உணர்ச்சியில் லாது குலாவி உலாவி அணைத்தலும் இன்பம் அதுவிது1 வாமே. (ப. இ.) கருத்தொத்த காதலரிருவர் அன்புருகிக் கூடும்போது ஆடவர் மகளிர்மாட்டுச் செய்யும் இன்ப ஏதுவாகிய அன்பு அளவிறந்தது. அதுபோன்று, சிவபெருமான்மாட்டு வைக்கும் பேரன்பாகிய உணர்ச்சியும் அளவிறந்தது. அவ்வுணர்ச்சியே தாமாக அடங்கவல்லார்க்கு உலகப்பற்றாகிய உணர்ச்சி சிறிதும் தோன்றாதவாறு சிவபெருமான் செய்தருள்வன். அவ்வுயிருடன் இன்புறும் வண்ணம் குலாவிக் கலந்து தன்னுடன் அணைத்தருள்வன். அணைத்து இன்பமும் கொடுத்தருள்வன். அப்பொழுது 'அது' என்று சொல்லப்படும் சிவத்துள் ஒடுங்கினமையால் 'இது' என்னும் ஆவி முழுநீறு பூசிய முனிவர் போன்று சிவமாகவே காணப்படும். அணைத்தல் - தன்னொடு கூட்டல். (அ. சி.) உணர்ச்சியுள் - ஈசனை அறியும் அன்பினுள். உணர்ச்சி இல்லாது - உலக உணர்ச்சி இல்லாது. (4) 271. உற்றுநின் றாரொடு மத்தகு சோதியைச் சித்தர்கள் என்றுந் தெரிந்தறி வார்இல்லை பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ2 முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே. (ப. இ.) மேலோதியவாறு அன்பினால் அது விதுவாகிய ஆவி ஆண்டவன் திருவடியைப் பொருந்தும் அங்ஙனம் பொருந்தினவருடன் தானும் பொருந்தி நிற்கும் பேரொளி சிவன். 'காமம் எனவொன்றோ கண்ணின்றுஎன் நெஞ்சத்தை, யாமத்தும் ஆளும் தொழில்' என்றவாறு கிடைத்தற்கரிய அச்சிவபெருமானின் வேறல்லாத திருவருளைத் தம் முனைப்பால் வேலை வாங்கும் நிலையினர் சித்தர்களாவர். அச்சித்தர்களாலும் சிவபெருமான் தேர்ந்துணரப்படுவானல்லன். ஆயினும் அளவிறந்த பத்திமையாலே பணிந்து அடிமைத் தன்மையால் அடியாராய்த் தொழுமவர்கட்குத் திருவடிப் பேரின்பப் பேறாகிய
1. அதுவிது. சிவஞானபோதம், 12. 4 - 1. 2. பத்திமையும் ஆரூரர், 7. 51 - 1: " தொண்டர்காள், 8. திருப்படையெழுச்சி, 2.
|