170
 

என்று பெயர். இம் மானின்கண் நின்று எழுச்சியாகிய ஆங்காரம் தோன்றும். இவ் வெழுச்சி மூவகைப்படும். அவை உணர்வு உழைப்பு உலகம் என்பன. இவற்றுள் உலக எழுச்சியினின்றும் பூதமுதலாகிய நுண்மை ஐந்தும் தோன்றும். நுண்மை - தன்மாத்திரை. நுண்மையினின்று வான் வளி வளர்ந்து தோன்றும். கானலாகிய தீயும், நீரும், எல்லாங் கலந்து கடினமாக இருக்கும் நிலமும் தோன்றும். முறையே இவற்றின் நிலைக்களமாகிய நுண்மையினை ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனக் கூறுப. கானல் என்பது கான் எனக் கடை குறைந்து நின்றது. தேனாகிய திருவருள் ஆற்றலின்கண் இவ்வைந்தும் கூடி உலகத்திலும் உடலிலும் பூதமாகப் பொருந்தும். பூதம் - பருமையாகத் தோன்றுவது. இவ்வைம் பூதக் கூட்டரவே புவனமாகும். பலவுலகத் தொகுப்பு புவனம் என்ப. புவனங்கள் இருநூற்று இருபத்து நான்கென்ப.

(அ. சி.) மான் - அசுத்த மாயை.

(5)

373. புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்1
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.2

(ப. இ.) ஒருவன் ஒருத்தியாய் ஓர் உடம்பின் கண்ணே தோற்றுவித்துத் திகழும் சிவபெருமான் புவனம் முழுவதையும் படைப்பவனாவன். பேரறிவும் பேராற்றலும் சீராக ஒருங்கமைந்த இவர்க்கு மக்களாயுள்ளவர் ஐவர். அவ் ஐவரும் முறையே அருளோன், ஆண்டான் அரன், அரி, அயன் என்பவராவர். இவ்வைவரும் முறையே சதாசிவன், மாஈசன், உருத்திரன், மால், அயன் எனவும் கூறப்படுவர். புவனத்தைப் படைக்கின்ற செந்தாமரை மேலுறை அயனும் சிவபெருமான் திருவாணை பெற்றவனாதலின் அவனுடன் கலப்பால் சிவன் ஒன்றாயிருப்பதால் அவனையும் சிவபெருமான் என்பர். பூமிசையான் - நான்முகன். நிலவுலகத்தினின்று புண்ணியப் பயனளிக்கும் புண்ணியனாயுள்ள சிவபெருமான் அயனுடன் நின்றும் புவனத்தைப் படைத்தருள்வன். புண்ணியன் - அம்மையோடு அப்பனாய்த் திகழ்ந்து ஆருயிர்கட்கு வழுவில் நலமருளும் முழுமுதற்சிவன்.

(அ. சி.) ஒருவன் ஒருத்தி - சிவம் சத்தி. புத்திரர் ஐவர் - சதாசிவன் - மகேசன் - உருத்திரன் - மால் - அயன்.

(6)

374. புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடுஞ் சத்தியுங்
கண்ணியல் பாகக் கல்வி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.3


1. சிவஞ்சத்தி. சிவஞான சித்தியார், 2 - 4 - 2.

2. வைத்தானை. அப்பர், 6. 43 - 8.

3. சாற்றிய. சிவஞான சித்தியார், 2 - 3 - 15.