நூற்கண் பேசப்படுகின்ற தூமாயையின் கீழாய் அடங்கிய மூலப் பகுதியின்கண் நின்று முறையாகத் தோன்றியனவே மேற்கூறியவைகள். உற்றதே - திருவருளாணையால் தோன்றியது. ஏ: ஈற்றசை. (30)
10. காப்பு 398. புகுந்துநின் றான்வெளி யாய்இரு ளாகிப் புகுந்துநின் றான்புகழ் வாய்இகழ் வாகிப் புகுந்துநின் றான்உட லாய்உயி ராகிப் புகுந்துநின் றான்புந்தி மன்னிநின் றானே. (ப. இ.) வெளியாகிய சிற்றறிவினை விளக்குதற் பொருட்டு நடப்பாற்றல் வாயிலாக அச் சிற்றறிவுடன் கலந்து நின்றனன் சிவபெருமான். அதுபோல் இருளாகிய அறியாமையைத் தொழிற்படுத்தும் பொருட்டு அதனுடனும் தோய்ந்தும் தோயாது நிற்கின்றனன். வெளி - ஒளி; சிற்றறிவு. சிற்றறிவுள்ளவர் சிவனைத் தொழுது புகழ்வர். அறியாமை வயப்பட்டவர் பழுதுரைத்து இகழ்வர். இது 'நல்லார் அறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற' என்னும் ஆளுடைய பிள்ளையார் அருளிய செந்தமிழ்த் திருமறையான் உணரலாம். அவ்வவர் புகழ் இகழ் மொழியினுள்ளும் புகுந்து நின்றனன் சிவன். ஆருயிர்கட்கு உடலாகவும் உயிர்க்கு உயிராகவும் புகுந்து நின்றனன். அங்ஙனம் நின்றருளிய சிவன் ஆருயிர்களின் அறிவுக்கு அறிவாய் அவ்வறிவினை விளக்கி நிலை பெற்று நின்றனன். மன்னுதல் - நிலைபெறுதல். புந்தி - அறிவு. (1) 399. தானே திசையொடு தேவரு மாய்நிற்குந் தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்குந் தானே கடல்மலை யாதியு மாய்நிற்குந் தானே உலகில் தலைவனு மாமே1 (ப. இ.) சிவபெருமான் கலப்பினால் பத்துத் திசையும் பற்றுடைத் தேவருமாய்த் தானாகவே நிற்பன். அதுபோல் உடலாய் உயிராய் ஏனைய தத்துவங்களுமாய் நிற்பன். அதுபோல் கடலும் மலையும் முதலாகிய எல்லாப் பொருள்களுமாய் நிற்பன். பொருள்தன்மையால் அச் சிவபெருமான் இவை அனைத்திற்கும் முதல்வனுமாய் நிற்பன். (2) 400. உடலாய் உயிராய் உலகம தாகிக் கடலாய்க் கார்முகில் நீர்பொழி வானாய் இடையாய் உலப்பிலி எங்குந்தா னாகி அடையார் பெருவழி அண்ணல்நின் றானே. (ப. இ.) முழுமுதல் விழுப்பொருளாம் சிவபெருமான் கலப்பால் உடல் உயிர் உலகமாகவும் நின்றனன். கடலாய், அக் கடனீரைப்
1. உலகெலா. சிவஞானசித்தியார், 2.
|